கிறிஸ்துமஸ் காலத்தில் சுவிஸ் தபால்துறையில் சாதனை அளவிலான பார்சல் விநியோகம்
கடந்த கிறிஸ்துமஸ் காலம் சுவிட்சர்லாந்து தபால்துறைக்கு மிகப் பிஸியான காலமாக அமைந்ததாக Swiss Post தெரிவித்துள்ளது. பிளாக் பிரைடே முதல் கிறிஸ்துமஸ் வரை உள்ள காலகட்டத்தில், நாடு முழுவதும் மொத்தம் 2.3 கோடி பார்சல்கள் பிரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.1 சதவீதம் அதிகமாகும் என ‘மஞ்சள் மாபெரும் நிறுவனம்’ என அழைக்கப்படும் தபால்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த முன் கிறிஸ்துமஸ் காலத்தில், 2025 டிசம்பர் 2ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் 13 இலட்சம் பார்சல்கள் கையாளப்பட்டுள்ளன. ஒரே நாளில் இவ்வளவு பெரிய அளவிலான பார்சல்கள் கையாளப்பட்டமை, சுவிஸ் தபால்துறை வரலாற்றிலேயே முதல் முறையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தபால்துறையின் தலைமை நிர்வாக அதிகாரி Pascal Grieder, பணியாளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். தபால்துறையின் உண்மையான இதயம் அதன் ஊழியர்களே எனக் கூறிய அவர், கிளைகள் மற்றும் பார்சல் பிரிப்பு மையங்களில், கடும் வானிலை, நகர போக்குவரத்து மற்றும் கிராமப்புற சவால்களை மீறி, தினந்தோறும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பணியாளர்களின் உழைப்பு, வாடிக்கையாளர்களுக்கும் முழு சுவிட்சர்லாந்துக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என பாராட்டினார்.

இணைய வர்த்தகத்தின் வளர்ச்சி காரணமாக, நடுத்தர மற்றும் நீண்டகாலத்தில் பார்சல் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என சுவிஸ் தபால்துறை எதிர்பார்க்கிறது. இதனை கருத்தில் கொண்டு, அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில், ஹேர்கிங்கன் (Härkingen), டயிலன்ஸ் (Daillens) மற்றும் ஃப்ரௌஎன்ஃபெல்ட் (Frauenfeld) ஆகிய இடங்களில் 25 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் தேசிய பார்சல் மையங்களை மறுசீரமைத்து, நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலத்திலும், எதிர்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் Frauenfeld-இல் ஒரு புதிய பிராந்திய பார்சல் மையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். தேசிய மையத்துக்கு அருகே அமைக்கப்படும் இந்த மையம், 2029 கிறிஸ்துமஸுக்கு முன் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 200 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
அதேபோல், 2026 ஆம் ஆண்டில் ஊர்டோர்ப் (Urdorf) பகுதியில் உள்ள பிராந்திய பார்சல் மையத்தில் கூடுதல் பார்சல் பிரிப்பு இயந்திரம் நிறுவப்பட உள்ளது. இது அந்த ஆண்டின் கிறிஸ்துமஸுக்கு முன் பயன்பாட்டுக்கு வரும் என்றும், அங்கு மேலும் 40 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தபால்துறை தெரிவித்துள்ளது. தற்போது சுவிட்சர்லாந்து முழுவதும் 14 இடங்களில் சுவிஸ் தபால்துறை பார்சல் பிரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..