ஆன்லைன் பாலியல் துஷ்பிரயோகம்: சுவிட்சர்லாந்து அரசு கடும் எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடைபெறும் வன்முறைச் செயல்கள், சுவிட்சர்லாந்தில் மத்திய மற்றும் கன்டோன் அரசுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பெண்களின் தனிப்பட்ட படங்கள் அனுமதியின்றி இணையத்தில் பரப்பப்படும் சம்பவங்கள், ரிவெஞ்ச் போர்ன் மற்றும் செக்ஸ்டோர்ஷன் போன்ற குற்றங்கள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் Lisa Boscolo எழுப்பிய கேள்விக்கு, கன்டோன் அரசின் மாநில சபை (Council of State) விரிவான பதிலை வழங்கியுள்ளது. அதில், ஒருவரின் அனுமதியின்றி அவருடைய புகைப்படங்களை அல்லது அதில் இடம்பெற்றுள்ள நபர்களின் ஒப்புதலின்றி அந்தப் படங்களை பயன்படுத்துவது, சுவிட்சர்லாந்து சட்டத்தின் கீழ் சிவில் மற்றும் குற்றவியல் ரீதியாகவும் சட்டவிரோதம் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், இணையத்தில் வெளியிடப்படும் படங்களுடன் இணைந்து வரும் அவதூறான, இழிவான கருத்துகளும், பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் நாட்டின் சட்டத்தின் படி அவதூறு குற்றமாக கருதப்பட்டு தண்டனைக்குரியதாகும் என்றும் அரசின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற குற்றங்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையிலேயே விசாரிக்கப்படுவதால், தானாகவே விசாரணை தொடங்கப்படும் வழக்குகளாக இல்லையெனவும் விளக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து பேசுகையில், பொதுமக்கள் குறிப்பாக இளம் பெண்கள் தங்களது புகைப்படங்களை எடுப்பதிலும், பகிர்வதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக ஆதாரங்களை சேகரித்து, சம்பந்தப்பட்ட இணைய தளங்களில் இருந்து அவதூறான உள்ளடக்கங்களை அகற்ற கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும், பிரச்சினை தீரவில்லை என்றால் கன்டோன் காவல்துறையையோ அல்லது நேரடியாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தையோ அணுகி புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணைய தளங்களில் இருந்து அவதூறான உள்ளடக்கங்களை அகற்றுவது தொடர்பில், கன்டோன் காவல்துறை சம்பந்தப்பட்ட தளங்களுக்கு அறிவிப்பு வழங்கி, உள்ளடக்கங்களை நீக்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும், அந்த தளங்களுக்கு சட்டபூர்வமான கட்டாயம் இல்லாவிட்டாலும், நடைமுறையில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நல்ல ஒத்துழைப்பு கிடைப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இதனுடன், இத்தகைய குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், பள்ளிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சந்திப்புகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும், இதற்காக பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் காவல்துறையுடன் இணைந்து கன்டோன் அரசு செயல்பட்டு வருவதாகவும் மாநில சபை மீண்டும் உறுதி செய்துள்ளது.