வடுஸ் ரைன் கரையில் சடலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழப்பு
லீக்டென்ஸ்டைன் தலைநகரான Vaduz நகரில் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு பிறகு, ரைன் நதிக்கரையின் சுவிஸ் பகுதியிலுள்ள கரையில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக Kantonspolizei St. Gallen உடனடியாக விசாரணையை தொடங்கியது.
முதற்கட்ட விசாரணையில், நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட நபர் 41 வயதுடைய, லீக்டென்ஸ்டைன் நாட்டைச் சேர்ந்த ஆண் என உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, லீக்டென்ஸ்டைன் மாநில காவல்துறையின் குற்றப் புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டது.
அந்த விசாரணையின் போது, வடுஸில் உள்ள ஒரு குடியிருப்பில் மேலும் மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முதற்கட்ட தகவல்களின் படி, அவர்கள் நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட நபரின் 73 வயதுடைய தந்தை, 68 வயதுடைய தாய் மற்றும் 45 வயதுடைய சகோதரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, மாநில காவல்துறையின் குற்றப் புலனாய்வு பிரிவு பெரும் போலீஸ் படையுடன் முழுமையாக மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு அனைத்து கோணங்களிலும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலையில் பொதுமக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்றும், நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் காவல்துறை உறுதியளித்துள்ளது. இந்த சம்பவம் லீக்டென்ஸ்டைன் மற்றும் சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகளை பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
©Landespolizei Fürstentum Liechtenstein