சுவிஸ் காம் இல் 3ஜி சேவை முடிவு: ஆண்டு இறுதியில் முழுமையாக நிறுத்தம்
சுவிட்சர்லாந்தின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான Swisscom, இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது 3ஜி மொபைல் வலையமைப்பை முழுமையாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த இந்த தொழில்நுட்பம், இப்போது அதிகாரப்பூர்வமாக ஓய்வுபெற உள்ளது.
தற்போதும் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் தனிநபர் மற்றும் வணிக வாடிக்கையாளர்கள் 3ஜி சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், வேகமான மற்றும் திறன் வாய்ந்த 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் பரவலாக பயன்பாட்டில் வந்துள்ளதால், 3ஜி தொழில்நுட்பம் பெரும்பாலும் மாற்றப்பட்டு விட்டதாக SwissCom தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள மற்றொரு முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனம் சன்ரைஸ், ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே தனது 3ஜி வலையமைப்பை நிறுத்தி விட்டது. இதே நேரத்தில், சால்ட் நிறுவனம் குறைந்தது அடுத்த ஆண்டின் இறுதி வரை 3ஜி சேவையைத் தொடர்ந்து வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
3ஜி சேவை நிறுத்தப்படுவதால், பழைய மொபைல் சாதனங்கள் மற்றும் சில தொழில்துறை பயன்பாடுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் சாதனங்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் உருவாகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிக வேகம், மேம்பட்ட இணைய அனுபவம் மற்றும் எதிர்கால டிஜிட்டல் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் எடுக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் தொலைத்தொடர்பு துறை விளக்குகிறது.
இந்த மாற்றம், சுவிட்சர்லாந்தின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை மேலும் நவீனப்படுத்தும் முக்கிய படியாக பார்க்கப்படுகிறது.