சுவிஸில் 8500 வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு.??? வெளியான செய்தி தொடர்பில் அரசு விளக்கம்
சமீப வாரங்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு செய்தி, சுவிட்சர்லாந்து 85,000 திறனற்ற வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மாதம் சுமார் 6,000 சுவிஸ் ஃபிராங்க் வரை சம்பளம் வழங்கப்படுவதாகவும் கூறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தகவல் முழுவதும் தவறானது என சுவிஸ் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த போலி செய்தி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மட்டுமல்லாமல், துனீசியா போன்ற தொலைதூர நாடுகளிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதாக சுவிஸ் அரசின் பொதுத் தொலைக்காட்சி நிறுவனம் RTS தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்ட இந்த தகவல், வேலைவாய்ப்பு தேடும் பலரை தவறாக நம்ப வைத்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் பொருளாதார விவகாரங்களுக்கான மாநிலச் செயலகமான SECO, இந்த தவறான தகவலின் மூலத்தை கண்டறிய முடியவில்லை என தெரிவித்துள்ளது. இருப்பினும், இவ்வாறு பரவும் எண்ணிக்கைகள் மற்றும் சம்பள விவரங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என SECO வின் பேச்சாளர் ஃபேபியன் மையென்பிஷ் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் கடுமையான சட்டங்கள், தகுதிகள் மற்றும் குடிவரவு விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாமல், இவ்வளவு பெரிய அளவில் திறனற்ற தொழிலாளர்களை நியமிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்றும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
போலி செய்திகளும் தவறான தகவல்களும் வேகமாக பரவும் இந்த காலகட்டத்தில், வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்கள் மற்றும் நம்பகமான ஊடகங்கள் மூலமாக மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© SwissIinfo