கரூஜ் நகரில் பெரிய வீட்டு திட்டத்திற்கு அனுமதி – 400 புதிய குடியிருப்புகள், மாணவர் தங்குமிடமும் கட்டப்படவுள்ளது
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா அருகே உள்ள கரூஜ் நகரில், பெரிய அளவிலான குடியிருப்பு மற்றும் கல்வி வசதிகள் உட்பட புதிய கட்டுமானத் திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கடந்த பத்து ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு வந்தது. இறுதி சட்ட தடைகளும் நீக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் கட்டுமானம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் பகுதியாக 400 புதிய குடியிருப்புகள் மற்றும் மாணவர்களுக்கு தனியாக ஒரு பெரிய விடுதி கட்டப்பட உள்ளது. தற்போது அந்தப் பகுதியில் உணவகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் குறைவாக உள்ளதை கருத்தில் கொண்டு, Migros சூப்பர் மார்க்கெட்டும் புதிதாக அமைக்கப்பட உள்ளது. இது அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு மிகுந்த வசதியைக் கொண்டுவரும் என உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், நகராட்சி சுமார் 24 மில்லியன் ஃபிராங்க் முதலீட்டில் புதிய விளையாட்டு மண்டபத்தையும் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு தேவையான விளையாட்டு வசதிகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் மூலம் புதிய அடிப்படை வசதிகள் கிடைக்கப் போவதை பலர் வரவேற்கிறார்கள். ஆனால், சில குடியிருப்பாளர்கள் அப்பகுதி பசுமை நிலம் குறைந்து விடும் என்ற கவலை தெரிவித்துள்ளனர். கரூஜ் போன்ற நகர்புறங்களில் பசுமை பகுதிகள் தக்கவைத்து பாதுகாக்க வேண்டும் என்ற எதிர்வினைகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. @rs