சுவிஸ் வேலைகள் குறைந்தாலும், 2026க்கு நேர்மறை சிக்னல்: கணிப்பில் தகவல்
வரும் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் ஆயிரக்கணக்கான வேலைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், வேலைவாய்ப்பு நிலவரத்தில் சிறிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. Manpower என்ற சர்வதேச ஆட்சேர்ப்பு நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய கருத்துக்கணிப்பில், நிகர வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பு (NEO) முந்தைய காலாண்டை விட 2 சதவீதம் உயர்ந்து 27 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இந்த கணிப்பு, புதிய பணியாளர்களை நியமிக்க திட்டமிடும் நிறுவனங்களின் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதேவேளை, துறை வாரியான நிலவரம் மாறுபட்டு காணப்படுகிறது. குறிப்பாக நிதி, காப்பீடு, வர்த்தகம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளில் எதிர்கால வேலை வாய்ப்பு மிகவும் தளர்வாக இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

பிராந்திய ரீதியாக மிட்டெல்லாந்த் பகுதியில் வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. சூரிக் இன்னும் உயர்ந்த வேலைவாய்ப்பு செயல்பாட்டைப் பதிவு செய்தாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவு தென்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் பல பெரிய நிறுவனங்கள் செலவு குறைப்பிற்காக பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், இந்த ‘எச்சரிக்கையுடனான நம்பிக்கை’ என்பது வேலை வாய்ப்பு நிலவரம் முழுமையாக நிலைநிறுத்தப்படவில்லை என்பதை காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.