ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிவேக ரயில் திட்டங்களில் சுவிட்சர்லாந்துக்கு இடமில்லை
ஐரோப்பிய ஒன்றியம் தனது அதிவேக ரயில் வலைப்பின்னலை விரிவுபடுத்தும் மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், அதில் சுவிட்சர்லாந்து சேர்க்கப்படாதது நாட்டில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஆணையம் தற்போது ஒரு விரிவான போக்குவரத்து தொகுப்பை (transport package) திட்டமிட்டு வருகிறது. இதில் புதிய அதிவேக ரயில் பாதைகள் அமைத்தல், ஏற்கனவே உள்ள பாதைகளை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் அடங்கும். 2040ஆம் ஆண்டுக்குள் வார்சா (போலந்து) நகரிலிருந்து பால்டிக் நாடுகளுக்குத் தொடரும் புதிய பாதைகள், பிரான்சின் பாரிஸ் நகரிலிருந்து ஸ்பெயின் வழியாக போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனுக்குச் செல்லும் நீண்டதூர அதிவேக பாதையும் உருவாக்கப்படும் என (ஐரோப்பிய ஒன்றியம்) EU திட்டமிட்டுள்ளது.
ஆனால் இந்த அனைத்தும் சுவிட்சர்லாந்தைத் தாண்டியே செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவின் மையப் பகுதியாக இருந்தும், பல முக்கிய பாதைகள் சுவிஸை விட்டு விலகுவது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளில், ஐரோப்பிய அதிவேக ரயில் வலைப்பின்னலுடன் இணைவதற்காக சுவிட்சர்லாந்து தன் பகுதியிலேயே 1 பில்லியன் ஃப்ராங்குக்கு மேல் முதலீடு செய்திருந்தாலும், EU இன் தற்போதைய விரிவாக்கத் திட்டங்களில் அந்த நாடு இடம்பெறவில்லை என்று சுவிஸ் கூட்டாட்சி போக்குவரத்துத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்நாடாக இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருப்பினும் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைகளில் இருதரப்பும் நெருங்கிய ஒத்துழைப்பைக் கொண்டுள்ள நிலையில், இந்தச் சூழ்நிலை எதிர்கால இணைப்புகளுக்கு சவாலாக மாறக் கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக சர்வதேச சுற்றுலாவும் சரக்கு போக்குவரத்தும் சுவிசின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக இருப்பதால், அதிவேக இணைப்பில் புறக்கணிப்பு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து சுவிஸ் அரசும் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பா முழுவதும் நிலையான போக்குவரத்து, விமானப் பயணத்தை குறைத்தல், கார்பன் உமிழ்வைத் தடுக்குதல் போன்ற இலக்குகளை முன்னெடுத்து வரும் நிலையில், அதிவேக ரயில் இணைப்புகள் அவசியமாக கருதப்படுகின்றன. ஆயினும் இந்த புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வந்தாலும், சுவிட்சர்லாந்து அதில் இல்லாத உண்மை அரசியல் உறவுகள் மற்றும் EU உறுப்பு பிரச்னை மீண்டும் பேசப்படத் தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.