ரோம் அருகே 80 வயதான பாட்டியை சுத்தியலால் அடித்து கொன்ற சுவிஸ் நபர்
ரோம் நகரத்தின் புறநகர்ப் பகுதியான ஆசிலியாவில், 30 வயதான ஒரு நபர் நடத்திய கொடூரத் தாக்குதல் இத்தாலியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை காலை, அவர் தனது தாயின் துணைவரையும் பாட்டியையும் சுத்தியலால் தாக்கியதில், பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாயின் துணைவர் கடுமையாக காயமடைந்த நிலையில் உயிர் தப்பினார்.
இத்தாலிய ஊடகங்களின் தகவலின்படி, குற்றம் செய்த இளைஞன் சுவிட்சர்லாந்தில்தான் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. சம்பவத்துக்கு முந்தைய இரவு அவர் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தார். மறுநாள் காலை டிசம்பர் 6 ஆம் தேதி, தனது 80 வயது பாட்டியின் ஆசிலியா வீட்டிற்கு அவர் சென்றார். அவரிடம் இருந்த வீட்டுத் திறவுகோல்கள் மூலம் உள்ளே நுழைந்து, எந்தத் தெளிவான காரணமும் தெரியாத நிலையில் கோபத்தில் மூழ்கி, முதலில் பாட்டியை பலமுறை தாக்கினார். காயங்கள் மிக தீவிரமாக இருந்ததால் அவள் உயிரிழந்தார்.
அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயின் துணைவர், சத்தம் கேட்டதும் தலையிட்டார். இதனால் அவரும் தாக்கப்பட்டார்; ஒரு கண் கடுமையாக சேதமடைந்ததுடன், ஒரு காதும் துண்டிக்கப்பட்டது. இருந்தாலும் அவர் உயிர் தப்பி ஓடிவந்து அருகிலிருந்த ஒரு (Cafe) கஃபேவில் உதவி கோரியதால் காவல்துறைக்கு தகவல் சென்றது.

குடும்பத்தினரின் கூற்றுப்படி, குற்றம் செய்த இளைஞன் பல ஆண்டுகளாக மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டார். ஆனால் தற்போது எந்த சிகிச்சையும் மேற்கொண்டு வரவில்லை. போலீசார் அவரை சந்தித்தபோது கூட அவர் தெளிவாக இல்லாத நிலையிலிருந்ததாக கூறப்படுகிறது. தனது செயலை பற்றி அவர் வழங்கிய விளக்கம் விசாரணையாளர்களை இன்னும் அதிரவைத்தது: “அவர்கள் என்னை தொடர்ந்து துன்புறுத்தினார்கள். நான் ஒன்றும் செய்யாதவன் என்று இழிவுபடுத்தினார்கள். சிறுபருவத்திலிருந்து இதுபோன்ற அவமானங்களை சந்தித்தேன். முப்பது ஆண்டுகளாக நான் வேதனையில் வாழ்ந்தேன். இனி சகிக்க முடியவில்லை” என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது வக்கீலும் அவருக்கு தீவிரமான மனநிலைக் கோளாறு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதலிற்குப் பின் அவர் தப்பிச்சென்றாலும், பின்னர் ரோம் நகரத்தில் இருந்தபோது தானே போலீசாரை தொடர்பு கொண்டார். போலீசார் வந்தபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் சரணடைந்த அவர், பயன்படுத்திய சுத்தியலை வீட்டின் அருகே உள்ள வெளியில் எறிந்துவிட்டதாகவும் காட்டிக் கொடுத்தார்.
தற்போது அவர் ரோம் நகரின் ரெப்பிபியா சிறையில் பாதுகாப்பு காவலில் உள்ளார். அவர்மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது என்பது குறிப்பிடத்தக்கது.