ஸ்விற்சர்லாந்தில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் ஆபத்தில் : வெளியான அறிவிப்பு
சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத் துறையில் இன்னும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.. சர்வதேச வங்கி மாபெரும் நிறுவனமான (UBS) யூபிஎஸ், உலகளாவிய பணியாளர் துறையில் சுமார் 10,000 பேரை பணிநீக்கம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாட்டுக்குள் மட்டும் சுமார் 3,000 பேரை வேலையை விட்டு நீக்குவதாக ஞாயிற்றுக்கிழமை வெளிப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கி இதை உறுதிப்படுத்தியும் இருக்கிறது.
2023ஆம் ஆண்டு நெருக்கடியிலிருந்த கிரெடிட் சுவிஸ் வங்கியை வாங்கியதிலிருந்து, இரு நிறுவனங்களின் பணிச்சூழலை ஒருங்கிணைக்கும் பணியில் யூபிஎஸ் தொடர்ந்து தன் பணியாளர்களை குறைத்து வருகிறது. இந்த இணைப்பு நடவடிக்கையில் ஒரே மாதிரியான பொறுப்புகள், துறைகள், மற்றும் மேலாண்மை நிலைகளில் அதிகப்படியான பணியாளர்கள் இருப்பது இந்த குறைப்புகளுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

யூபிஎஸ் மற்றும் கிரெடிட் சுவிஸ் இணைப்பு சுவிட்சர்லாந்தின் வங்கி துறையில் பல தசாப்தங்களுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிறது. இதன் பின்னணியில் கடந்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான சுவிஸ் பணி இழப்புகள் தற்போது மேலும் அதிகரிக்கக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இத்தகைய பணிநீக்கங்கள் சுவிட்சர்லாந்தின் நிதி மையங்களான சூரிக் மற்றும் ஜெனீவா போன்ற நகரங்களில் வேலைவாய்ப்பு சூழ்நிலைக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் நிலையில், வங்கி துறையில் நிலவும் மாற்றங்கள் பொதுப்பணியாளர்களின் எதிர்காலம் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன.