பேர்ன் – பெல்ப் நகரம் பள்ளி விடுமுறைகளில் மாற்றம் கொண்டுவர திட்டம்.!!
பேர்ன் கன்டோனில் உள்ள பெல்ப் நகரம், குடும்பங்களின் நாள் தவணைச் சுமையை குறைத்து, குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் அதிகமான தரமான நேரத்தை வழங்கும் நோக்கில் ஒரு புதுமையான கல்வி-பராமரிப்பு முறைமையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. “யாரெஸ்ஷூலே” (Jahresschule) எனப்படும் இந்த ‘ஆண்டு பள்ளி’ முறை தற்போது அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த முறைப்படி, மாணவர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும், காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை பள்ளியில் இருப்பார்கள். ஆசிரியர்களும் துணை பணியாளர்களும் முழுநேர வழிகாட்டுதலுடன் குழந்தைகளை கவனிப்பார்கள். இதற்குப் பதிலாக, தற்போது 13 வாரங்கள் உள்ள பள்ளி விடுமுறை, வருடத்திற்கு மொத்தம் 6 வாரமாகக் குறைக்கப்படும். கோடைவிடுமுறை மற்றும் புத்தாண்டு காலத்தில் தலா இரண்டு வாரங்கள், வசந்தகாலம் மற்றும் இலையுதிர்காலத்தில் தலா ஒரு வாரம் விடுமுறை என்பதாக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

பெல்ப் நகர குடும்ப மற்றும் கல்வித்துறையின் பொறுப்பாளர் டானியாகா ஷேடெலி கூறுவதில், பாட நேர எண்ணிக்கை எதுவும் குறையாது, ஆனால் இடைவேளை காலம் மட்டுமே மறுவினியோகம் செய்யப்படும். இது குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த, துறைச்சார் கற்றல் சூழலை உருவாக்கும் என்றும், குடும்பங்களுக்கு ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் நிலையான அன்றாட வாழ்க்கையை வழங்கும் என்றும் அவர் விளக்குகிறார்.
வாரத்தில் ஒரு கூடுதல் விடுமுறை நாள் இருப்பதால், வேலை செய்கிற பெற்றோருக்கு இது பெரும் நிம்மதியைத் தரும் எனப் பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி முதலில் ஒரு பள்ளியில் முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும். குறைந்தது 18 மாணவர்கள் சேர்க்கை கிடைத்தால் தான் திட்டம் செயல்படுத்தப்படும். தற்போது இந்த அமைப்பில் பணிபுரியும் பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுமார் 18 மாதங்களுக்கு பின், பேர்ன் மேல்படிப்பு கல்வி நிறுவனம் (PH Bern) இந்த முயற்சியை மதிப்பீடு செய்யும். முடிவுகள் எதிர்மறையாக இருந்தால், மூன்று ஆண்டுகளுக்குப் பின் திட்டம் நிறுத்தப்படும். நேர்மறையான முடிவுகள் வந்தால், அது அறு ஆண்டுகள் வரை நீடிக்கும். இந்த முறைமை சட்டபூர்வமாக கட்டாயப்படுத்த வேண்டுமெனில், கன்டோன் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டி வரும்.
இத்திட்டத்தில் நன்மைகளுடன் சில சவால்களும் உள்ளன என்பதையும் ஷேடெலி ஒப்புக்கொள்கிறார். அதிக நேரம் ஒன்றாகக் கழிப்பதால் பள்ளிப் பணியாளர்கள் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு தேவைப்படும். மாணவர்கள் இடையே புல்லிங் அல்லது மோதல்கள் ஏற்படாமல் தடுப்பதற்கும் கூடுதல் கவனம் அவசியம். எனவே பணியாளர்களுக்கு உறுதியான பயிற்சி மிகவும் முக்கியம் என அவர் வலியுறுத்துகிறார்.
பெல்ப் நகரம் இந்த மாற்றத்தில் முன்னோடியாக உள்ளதால், இதே மாதிரியான திட்டத்தைப் பற்றி பிற நகரங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. “இதை முன்பே யாரும் யோசிக்காதது ஆச்சரியமாக உள்ளது,” என மேயர் ஸ்டெஃபன் நியூஎன்ஷ்வாண்டர் கூறுகிறார்.
பேர்ன் கல்வி ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் மிசெல்லே யுட்சியும் இந்த முயற்சியை ஆதரிக்கிறார். இப்படிப்பட்ட புதிய மாதிரிகளை அறிமுகப்படுத்த தைரியம் தேவைப்படுகின்றது என்று அவர் கூறுகிறார். முழுநேர பள்ளி அமைப்புகளுக்கான தேவை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வாரத்தில் ஒரு கூடுதல் விடுமுறை நாள் குடும்பங்களுக்கு உண்மையிலேயே உதவக்கூடும் என்றும், தொடர்ந்து ஒரே சூழலில் இருக்கும் குழந்தைகளுக்கு இது நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை அளிக்கும் என்றும் அவர் விளக்குகிறார்.
இந்த ‘ஆண்டு பள்ளி’ முறை சுவிட்சர்லாந்தில் குடும்ப வாழ்கைக்கும் கல்வி முறைக்கும் புதிய பாதையை அமைக்குமா என்பது வரும் ஆண்டுகளில் தெரியும்.
©