சுவிட்சர்லாந்தில் காய்ச்சல் (Flu) நோயாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மட்டும் 459 பேருக்கு ஆய்வக பரிசோதனைகளில் காய்ச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த எண்ணிக்கை, முன் வாரத்தைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாகும். மேலும், கடந்த ஆண்டு இதே காலத்தை ஒப்பிடுகையில் இரு மடங்குக்கும் மேல் உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த வார சனிக்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள் படி, ஒவ்வொரு 100,000 பேரில் 5.05 பேருக்கு காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே வாரத்தில் இந்த விகிதம் 2.05 ஆக இருந்தது.

எனினும் தற்போதைய தரவுகள் ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவை வழங்காத போதிலும், காய்ச்சல் பரவல் அலை ஆரம்பிக்கும் நிலையில் இருப்பதை சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
2022 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற பரவல் நிலை ஏற்பட்டதாகவும், அந்த ஆண்டில் காய்ச்சல் அலை டிசம்பர் மாதம் முதலே உச்சத்தை எட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் உச்ச நிலை ஜனவரி மாத இறுதியில் தான் பதிவாகியிருந்தது.