குற்றவாளி பதிவில் ஐந்து தோல் நிற வகைகள்: புதிய முறையை அறிவித்த சுவிஸ்
சுவிஸ் கூட்டரசு போலீஸ் துறை, 2026 ஜனவரி 1 முதல் நாட்டின் ‘ரிபோல்’ (RIPOL) எனப்படும் தேசிய தேடல் பதிவுத்தளத்தை நவீனப்படுத்தும் பணிகளைத் தொடங்குகிறது. இந்த அமைப்பு காணாமல் போனவர்கள், தேடப்பட்டவர்கள், நாடுகடத்தப்பட்டவர்கள், அல்லது ஆபத்தான நபர்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைக்கும் முக்கிய தேசிய தரவுத்தளம் ஆகும்.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூட்டரசு போலீஸ் அலுவலகமான Fedpol, இனிமேல் குற்றச்செயல்களில் சந்தேகப்படப்படும் அல்லது தேடப்படும் நபர்களின் தோல் நிறத்தை குறிப்பதற்காக ஐந்து தேர்வுகள் சேர்க்கப்படுகின்றன என தெரிவித்துள்ளது. அவை மிக வெளிர், வெளிர், நடுத்தர, கருப்பு, மிகக் கருப்பு என்ற வகை பிரிவுகளாக இருக்கும்.
மேலும், ‘வகை’ (type) எனப்படும் பகுதி ஒன்பது தேர்வுகளால் நிரப்பப்படும். இவை புவியியல் பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட வகைப்படுத்தலாக இருக்கும். வட ஐரோப்பா, வட ஆப்ரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா போன்ற பிராந்திய அடையாளங்கள் இதில் சேர்க்கப்படும்.

சுவிஸில் போலீஸ் தரவுத்தளங்களை புதுப்பிப்பது குற்ற விசாரணைகளில் துல்லியத்தையும் ஒருமைப்பாட்டையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். அதேசமயம், இத்தகைய தோல் நிறம் மற்றும் பிராந்திய அடிப்படையிலான வகைப்படுத்தல்கள், இன அடையாளப்படுத்தலுக்கு வழிவகுக்கும் என்ற விமர்சனங்களும் சில சமூகங்களில் முன்வைக்கப்படுகின்றன.
Fedpol இதைப் பற்றி விளக்கமளிக்கும் போது, குற்ற விசாரணைகளில் துல்லியமான விளக்கங்களைப் பெறுவது முக்கியம் என்றும், இது எந்தவித இன அடிப்படையிலான பிரிவுபடுத்தலாக பயன்படுத்தப்படக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்த புதுப்பிப்பு அமலுக்கு வந்தவுடன், சுவிஸ் தேடல் பதிவுகள் சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் விவரக்குறிப்பு முறைகளுடன் இன்னும் நெருக்கமாக இணைக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.