சொலோதூர்ன் கண்டோனில் 130 பார்சல்கள் மாயம் : கூரியர் மீது நீதிமன்ற விசாரணை
சுவிசின் சொலோதூர்ன் (Solothurn) கண்டோனில் பணியாற்றிய ஒரு கூரியர் மீது 2024ஆம் ஆண்டு ஏழு மாதங்களில் மொத்தம் 130 பார்சல்களை திருடியதாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஸ்மார்ட்போன்களையே முக்கியமாக இலக்காகக் கொண்ட அவர், திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு 100,000 ஃபிராங்க்களுக்கு மேல் இருக்கும் என விசாரணை தெரிவிக்கிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் ருமேனியா நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவர். ஆனால் அவர் மட்டுமல்ல; திருடப்பட்ட மொபைல்கள் மற்றும் பிற பொருட்களை வெளிநாட்டில் விற்பனை செய்ய அவரது மனைவி உதவியதாகவும் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்று சொலோதூர்னின் தால்–கொய் (Thal-Gäu) மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அந்த நபர் பகுதியளவு ஒப்புக்கொண்டார். அதிகபட்சம் 40 பார்சல்கள் மட்டுமே திருடியதாகவும், தனது மனைவிக்கு இது குறித்து ஒன்றும் சொல்லவில்லை என்றார். அவளிடம் சொல்லாமல் இருந்ததற்குக் காரணம் ‘வெட்கம்’ எனவும் தெரிவித்தார். மனைவி தனது மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார்.
பொது வழக்கறிஞர், அந்த ஆணுக்குச் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தொடர்ந்து ஆறு ஆண்டுகள் சுவிட்சர்லாந்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். மனைவிக்கு ஒரு ஆண்டு பத்து மாதங்கள் சிறைத் தண்டனையும், ஐந்து ஆண்டுகள் நாடுகடத்தலும் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்படும்.
© 20Minuten