சுவிஸ் பன்னாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை விட அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்குகின்றன
சுவிட்சர்லாந்தில் செயல்படும் நிறுவனக் குழுமங்களில் 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 21.4 லட்சம் பணியாளர்கள் இருந்ததாக சுவிஸ் கூட்டாட்சி புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டை விட 0.8 சதவீதம் அதிகமாகும்.
இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக சுவிஸ் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளது. இந்நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டில் 1.4 சதவீத வேலைவாய்ப்பு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இதனால், நாட்டின் மொத்த பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதியையே சுவிஸ் பன்னாட்டு நிறுவனங்களே வேலைக்கு அமர்த்தியுள்ளன.
மறுபுறம், வெளிநாட்டு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வளர்ச்சி மிகக் குறைவு. அதே காலகட்டத்தில் இந்நிறுவனங்களின் பணியாளர் எண்ணிக்கை வெறும் 0.2 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இது சுவிஸ் தாயக நிறுவனங்கள் நாட்டின் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை தெளிவாக காட்டுகிறது.

ஆனால் வருவாய் அளவில் வெளிநாட்டு நிறுவனங்களே முன்னிலையில் உள்ளன. நாட்டில் உள்ள அனைத்து நிறுவனக் குழுமங்களின் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கையும் இந்நிறுவனங்களே உருவாக்குகின்றன. இது சுவிஸ் சந்தையில் வெளிநாட்டு மூலதனத்தின் பொருளாதார தாக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய குறியீடாகும்.
சுவிட்சர்லாந்தின் வேலைவாய்ப்பு சந்தை தொடர்ந்து நிலையான வளர்ச்சியைச் சந்தித்தாலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கிடையேயான பங்கு மற்றும் தாக்கம் பற்றிய விவாதங்கள் நாட்டின் பொருளாதார கொள்கைகளில் முக்கியத்துவம் பெற்றவை.
® KeystoneSDA