சமூக ஊடகத்தை முற்றிலும் தடை செய்வது சரியான தீர்வு அல்ல : சுவிட்சர்லாந்து குழந்தைகள் ஆணையம்
சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையம், குழந்தைகளுக்கான பொதுவான சமூக ஊடகத் தடை தேவையில்லை என்று தனது புதிய நிலைப்பாடு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முழுமையான தடை, குழந்தைகளும் பெற்றோர்களும் தங்களால் முடிவு எடுக்கும் திறனை தேவையற்ற வகையில் கட்டுப்படுத்தும் என ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் குழந்தைகள் உரிமைகள் காப்புரிமை ஒப்பந்தத்தில், குழந்தைகளை பாதுகாப்பது மட்டுமல்லாது, வயதிற்கு ஏற்ற தகவல், கல்வி அணுகல் மற்றும் டிஜிட்டல் உலகில் பங்கேற்கும் உரிமையும் அடங்கியுள்ளது. இதனால், சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பான தெளிவான விதிமுறைகள் மற்றும் பொறுப்புகள் குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோருடனே சேர்ந்து உருவாக்கப்பட வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகத்தில் இருக்கும் ஆபத்துகள் மட்டுமல்லாமல், அதன் நன்மைகள் மற்றும் கற்றல் வாய்ப்புகளையும் புரிந்து கொள்ளும் திறன் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்ற கருத்தையும் அது முன்வைக்கிறது.
அதே நேரத்தில், பெரிய ஆன்லைன் தளங்கள் மீது கூடுதல் ஒழுங்குமுறை தேவைப்படுவதாகவும் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களில் மொபைல் போன் மற்றும் சமூக ஊடகத் தடை குறித்து சமீபத்திய விவாதங்கள் தீவிரமாகியுள்ளது. உதாரணமாக, நிட்வால்டன் கன்டோனில் 2025/2026 கல்வியாண்டு தொடங்கியதிலிருந்து பள்ளிகளில் மொபைல் போன்கள் மற்றும் மற்ற டிஜிட்டல் சாதனங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், சோலோதுர்ன் மாநிலத்தில் ஒவ்வொரு பள்ளியும் தடை விதிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை தனிப்பட்ட முறையில் தீர்மானிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பயன்பாடு குழந்தைகளின் நாளாந்த வாழ்க்கையில் முக்கியமானதாக மாறிவருகின்ற நிலையில், முழுமையான தடைகளுக்குப் பதில் சமநிலைப்பட்ட வழிகாட்டுதல்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் சிறந்த தீர்வாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
© KeystoneSDA