சூரிச் மற்றும் ஆர்காவ் கன்டோன்களை இணைக்கும் Furttal பள்ளத்தாக்கில் சுய இயக்கக் கார்கள்
சுவிட்சர்லாந்தின் சூரிச் மற்றும் ஆர்காவ் கன்டோன்களை இணைக்கும் (Furttal ) புற்றால் பள்ளத்தாக்கில் சுய இயக்கக் கார்கள் (Self-Driving Cars) இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடக்க கட்டமாக, பாதுகாப்பு காரணங்களுக்காக ஓர் ஓட்டுநர் வாகனத்தில் இருப்பார். ஆனால் சில வாரங்களுக்கு நடைபெறும் பயிற்சி ஓட்டங்களுக்குப் பிறகு, பாதுகாப்பு ஓட்டுநர் இல்லாமல் சோதனை இயக்கம் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“போக்குவரத்து துறையில் புதிய மாற்றத்தை தொடங்கும் முக்கிய நாளிது,” என சூரிச் மாநிலத்தின் பொருளாதார விவகார இயக்குநர் கார்மென் வாக்கர் ஸ்பே ஊடகங்களுக்கு தெரிவித்தார். ரெகன்ஸ்டார்ஃப் முதல் கில்ல்வாங்கன் வரை அமைந்துள்ள பகுதியே இந்த பைலட் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, 2026ஆம் ஆண்டு முதல் பாதியில் பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியும். தொடக்கத்தில் மூன்று சுய இயக்கக் கார்கள் மட்டுமே சேவைக்குக் கொடுக்கப்படும்; அவை ஒரு மொபைல் ஆப்ளிக்கேஷன் மூலம் கட்டண அடிப்படையில் முன்பதிவு செய்யும் முறையிலிருக்கும்.

இந்த திட்டத்தில் சுவிஸ் கூட்டாட்சி ரயில்வே (SBB), ஆர்காவ் மற்றும் சூரிச் மாநிலங்கள் மற்றும் ‘Swiss Transit Lab’ இணைந்து செயல்படுகின்றன. சூரிச் மாநிலம் 38 லட்சம் ஸ்விஸ் ஃபிராங்க் முதலீடு செய்கிறது; ஆர்காவ் மாநிலம் 2026 முதல் 19 லட்சம் ஃபிராங்க் ஒதுக்குகிறது. SBB ஏற்கனவே வருடத்திற்கு 10 இலட்சம் ஃபிராங்க் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. திட்டத்தின் அதிகபட்ச காலவரைவு ஐந்து ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து போக்குவரத்துத் துறையில் நடைபெறும் இந்த புதிய முயற்சி, எதிர்கால நகர்ப்புற போக்குவரத்துக்கு முன்னோடியான மாற்றமாகக் கருதப்படுகிறது. உலகம் முழுவதும் தன்னாட்சி வாகன சேவைகள் விரிவடையும் நிலையில், சுவிட்சர்லாந்து இந்தப் புதிய முயற்சியின் மூலம் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் மேலும் ஒரு படி முன்னேறுகிறதென நிபுணர்கள் கூறுகின்றனர்.
© KeystoneSDA