ஷாஃப்ஹௌசனில் ‘Spitex’ பெயரில் போலி தொலைபேசி அழைப்புகள் – பொலிஸார் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் ஷாஃப்ஹௌசன் பகுதியில், ‘Spitex’ எனப்படும் வீட்டிலேயே நலச்சேவை வழங்கும் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி வரிசையாக போலி தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்டுவருகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் இதுபோன்ற பல புகார்கள் ஷாஃப்ஹௌசன் பொலிஸாரிடம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, இந்தக் போலி அழைப்புகளில் பல்வேறு சேவைகள் வழங்கப்படுவதாக கூறப்பட்டதோடு, தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்பட்டதாகவும், சுகாதாரச் சோதனைகளுக்கான சந்திப்புகளை ஏற்பாடு செய்ய முயற்சித்ததாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த அழைப்புகள் உண்மையான பிராந்திய Spitex நிறுவனத்திடமிருந்து வராதவை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இவை முற்றிலும் மோசடி நோக்கத்துடன் செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பொலிஸார் பொதுமக்களுக்கு மிகுந்த எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, சந்தேகத்துக்கிடமான அழைப்புகளைத் தவிர்க்க சில முக்கிய ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர். ஒருவர் உண்மையில் Spitex நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்ததா என்பதை உறுதிப்படுத்த, பேசுவதை உடனே நிறுத்தி, பிராந்திய Spitex அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எண்ணுக்கு நேரடியாக அழைக்குமாறு பொலிஸார் பரிந்துரைக்கின்றனர்.
மேலும், யாரேனும் Spitex பணியாளர்கள் என்று கூறி வீட்டிற்கு வருவதாக இருந்தால், முன்கூட்டியே அந்த நிறுவனத்திடம் சரிபார்க்காமல் அனுமதிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் அடிக்கடி நடைபெறும் “Enkeltrick” போன்ற மோசடி முயற்சிகளுக்குப் பின், தற்போது சுகாதார சேவைகளை போலி பெயரில் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்தக் கள்ள அழைப்புகள் மூத்த குடிமக்களை அதிகமாக குறிவைத்து இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.