சுவிட்சர்லாந்தில் மருத்துவர்கள் நோயாளர்களிடமிருந்து லஞ்சம் கோருவதாக அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தில் சில மருத்துவர்கள், நோயாளர்களிடம் ரகசியமாக லஞ்சம் கோருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டு ஊடகங்கள் இதுகுறித்து செய்தி வெளியிட்டு, சிகிச்சையை விரைவுபடுத்த இந்த நடைமுறை பல பகுதிகளில் பரவியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.
ஜெர்மன் பேசும் பிராந்தியங்களில் உள்ள நோயாளர் உதவி மையங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு கடந்த ஆறு மாதங்களில் 32 புகார்களை பதிவு செய்துள்ளது. பெரும்பாலானவை சூரிச் கன்டோனில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் பலர் பழிவாங்கப்படும் என்ற பயத்தில் புகார் செய்யத் தயங்குவதால், உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கக்கூடும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
சூரிச் நோயாளர் உதவி மையத்தின் இயக்குநர் மாரியோ ஃபாஸ்ஹவுயர் வெளியிட்ட தகவலின்படி, ஒரு பொது மருத்துவர் 300 ஃப்ராங்க் வரை கோரியுள்ளதாகவும், அடிப்படை மருத்துவ காப்பீட்டில் உள்ள சிகிச்சைக்கே உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் 8,000 ஃப்ராங்க் வரை கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நிபுணர், முறைப்பாடு செய்யப்பட்ட பின்னரும் பணியில் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நடைமுறை ஒழுக்கநெறிக்கு புறம்பானது என்ற கருத்தில் அனைத்து தரப்பும் ஒரே காலம் இருந்தாலும், சட்ட ரீதியாக இது தடைசெய்யப்பட்டதா என்ற கேள்வியில் முரண்பாடு உள்ளது. சூரிச் மருத்துவர்கள் சங்கம் மற்றும் பாசல்–ஷ்டாட் சுகாதாரத் துறை இந்த ரகசிய கட்டணங்களை “தடைசெய்யப்பட்டவை” எனக் கூறினாலும், நோயாளர் சம்மதித்தால் “நேர முன்னுரிமை” ஒரு கூடுதல் சேவையாக கருதப்படலாம் என்று சுவிஸ் மருத்துவ சங்கம் (FMH) மற்றும் சுகாதாரத் துறை வலியுறுத்துகின்றன.
இந்த சட்டரீதியான குழப்பம் சில மருத்துவர்களுக்கு தண்டனை அச்சமின்றி லஞ்ச முறையை தொடரும் வாய்ப்பை அதிகரிக்கிறது. வோட் மற்றும் ஜெனிவா கன்டோன்களில் கூட பல சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பிரெஞ்சு பேசும் சுவிட்சர்லாந்தில் செயல்படும் SOS Patients’ Rights அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. சில சந்தர்ப்பங்களில் ஆயிரக்கணக்கான ஃப்ராங்குகள் லஞ்சமாக’ வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த பிரச்சனையின் உண்மையான பரவலை மதிப்பிட எவ்வித அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களும் தற்போது இல்லை. சுவிட்சர்லாந்தில் மருத்துவக் கட்டணங்களில் உள்ள இந்த குழப்பம், பொதுமக்களுக்கு நேர்மையான சிகிச்சை கிடைக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது.