ஜெனீவாவின் கடுமையான வீட்டு பாதுகாப்பு விதிகள் வாடகையை மேலும் உயர்த்தியதாக ஆய்வு
சுவிட்சர்லாந்தின் வடமேற்கு தொழில்பயிற்சி மற்றும் கலைகள் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று, ஜெனீவா கண்டோனின் கடுமையான வீட்டு பாதுகாப்பு விதிகள் எதிர்பாராத வகையில் வாடகை உயர்வுக்கு காரணமாகியுள்ளது என தெரிவிக்கிறது. இந்த கண்டோன் நாடு முழுவதும் மிகவும் பழுதடைந்த வீடுகளை கொண்ட பகுதியாகவும் இதே ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
வடிவமைப்பு மற்றும் கட்டுமான தரவை அடிப்படையாக வைத்து கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வாளர்கள் பகுப்பாய்வு செய்துள்ளனர். ஜெனீவாவில் தொடர்ந்து பலமுறை கடுமையாக்கப்பட்ட LDTR சட்டம் (“அழிப்புகள், மாற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கான சட்டம்” ) முதலீட்டாளர்களைத் தயக்கம் கொள்ளச் செய்ததாகவும், இதனால் சுமார் 600 மில்லியன் ஃப்ராங்க் மதிப்புள்ள கட்டுமானத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் அல்லது தாமதமடைந்ததாகவும் ஆய்வு கூறுகிறது.
தீவிரமான LDTR சட்டம் முதன்மையாக வாடகையாளர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. எந்த கட்டிடத்தை எப்போது புதுப்பிக்கலாம், பழுது பார்க்கும் பணிக்காக எப்போது வாடகையாளரை வெளியேற்றலாம், புதுப்பிப்புக்கு பின் எவ்வளவு வரை வாடகையை உயர்த்தலாம் போன்றவற்றை இந்த சட்டம் கண்டிப்பாக கட்டுப்படுத்துகிறது.

ஆனால் இதன் பக்கவிளைவு பெரிதாக இருந்ததாக ஆய்வு பதிவு செய்கிறது. புதிய வீடுகள் மிகக் குறைவாகவே கட்டப்பட்டன. மேலும் பழைய கட்டிடங்கள் பெரும்பாலும் ஒருபோதும் நவீனப்படுத்தப்படவில்லை. இதனால் ஜெனீவாவில் பழுதடைந்த, மேம்பாடு செய்யப்படாத வீடுகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துள்ளது.
ஆய்வின் மற்றொரு முக்கிய முடிவு பழைய வாடகையாளர்களும் புதிதாக குடிபெயர்பவர்களும் இடையே உருவாகியுள்ள வாடகை விலைக்கு இடையேயான பெரிய வித்தியாசம். தற்போது ஜெனீவாவில் புதிய வாடகையாளர்கள், நீண்டகாலமாக வசிக்கும் வாடகையாளர்களை விட சதுரமீட்டருக்கு சுமார் மூன்றில் ஒரு பங்கு அதிக வாடகை செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வீட்டு தட்டுப்பாடு தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில, இந்த ஆய்வு கொள்கை வடிவமைப்பாளர்களுக்கு சிந்திக்க வேண்டிய முக்கிய சிக்னல்களை வழங்குகிறது. LDTR போன்ற பாதுகாப்பு சட்டங்கள் வாடகையாளர்களுக்கு பாதுகாப்பு அளித்தாலும், அது நீண்டகாலத்தில் வீட்டு சந்தைக்கு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து விவாதம் தொடர்கிறது.