அமெரிக்க இறைச்சி விற்பனையை விரும்பாத சுவிஸ் சூப்பர் மார்க்கெட்டுகள்
சுவிட்சர்லாந்தும் அமெரிக்காவும் சமீபத்தில் புதிய குறைந்த சுங்க வரி ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளன. அதன் படி, சுவிஸ் நாடு 500 டன் மாட்டிறைச்சி, 1,000 டன் பைசன் இறைச்சி மற்றும் 1,500 டன் குளோரின் செயலாக்கப்பட்ட கோழி இறைச்சியை கட்டாயமாக இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்த அறிவிப்புடன், இவ்வாறு அமெரிக்காவில் இருந்து வரும் இறைச்சி சுவிஸ் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுமா? அதனால் உள்ளூர் சுவிஸ் இறைச்சி தயாரிப்புகளுக்கு பாதிப்பு உருவாகுமா? நாட்டில் உள்ள நுகர்வோர்களிடம் ஒரு முக்கியமான கேள்வி எழுந்தது.
இந்த சந்தேகங்களுக்கு முக்கிய சில்லறை சங்கங்கள் தெளிவாக பதிலளித்துள்ளன. மிக்ரோஸ், தாங்கள் இயன்றவரை உள்ளூர் இறைச்சிக்கே முன்னுரிமை அளிப்போம் என்று தெரிவித்துள்ளது. எனவே, அமெரிக்காவுடன் உள்ள இந்த சுங்க ஒப்பந்தம் தங்களின் தற்போதைய பொருட்கள் பட்டியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கோப்பும் (Coop) இதே நிலைப்பாட்டையே உறுதிப்படுத்தியுள்ளது. “எங்கள் முக்கிய முன்னுரிமை எப்போதும் சுவிஸ் இறைச்சிதான்” என்று அவர்கள் கூறியுள்ளனர். இதேபோல் தள்ளுபடி சூப்பர் மார்க்கெட்டுகளான லிடில் மற்றும் ஆல்டி ஆகியவை கூட அமெரிக்க இறைச்சியை தங்கள் கடைகளில் சேர்க்க ஆர்வம் காட்டவில்லை. மிக்ரோஸின் துணை நிறுவனம் டென்னரும் அதே அணுகுமுறையையே பின்பற்றுகிறது.

சுவிட்சர்லாந்து, ஐரோப்பாவில் மிகக் கடுமையான இறைச்சி தர மற்றும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றும் நாடுகளில் ஒன்றாகும். குளோரின் கலந்த கோழி இறைச்சி தொடர்பான விவாதங்கள் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் பல ஆண்டுகளாக சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. இதனால் இவ்வகை இறைச்சியை நுகர்வோர் விரும்பாமல் இருக்கலாம் என்ற புரிதலும் விற்பனையாளர்களிடம் உள்ளது.
அதனால், அமெரிக்க இறைச்சி சுவிஸ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என்றாலும், அது முக்கிய சூப்பர் மார்க்கெட்டுகளில் பொதுவாக விற்பனை செய்யப்படும் வாய்ப்பு மிகக் குறைவு. பெரிய சில்லறை சங்கங்கள் அனைத்தும் தங்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளன: சுவிஸ் நுகர்வோருக்கு, உள்ளூர் தரமான இறைச்சியே தொடர்ந்தும் முக்கியமான தெரிவாக இருக்கும் என்பது இச்செய்தியில் மூலம் சுட்டிக்காட்டப்படுகிறன்றமை குறிப்பிடத்தக்கது.