விண்டர்தூரில் புதிய ரேடார் ஆறு வாரங்களில் 7 இலட்சம் பிராங்க் வசூல்
செப்டம்பர் மாத நடுப்பகுதியிலிருந்து விண்டர்தூர் நகரில், டோஸ் பகுதியிலிருந்து நகர மையத்துக்கு வரும் சாலையில் ஒரு ரேடார் செயல்பாட்டில் உள்ளது. இந்த ரேடார் வெறும் ஆறு வாரங்களில் நகரத்திற்கு சுமார் 700,000 ஸ்விஸ் பிராங்கை வருவாய் ஈட்டித் தந்துள்ளது என்று நகர போலீஸ் பேச்சாளர் மைக்கேல் விர்ஸ் “ஸ்ட்ரீட்லைஃப்” இதழுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு 560,000 பிராங்கை ஒரு ஆண்டில் வசூலித்த (Wölflingen) வூல்ஃப்லிங்கன் பகுதியிலுள்ள (Salomon-Hirsel-Straße) சாலமன்-ஹிர்செல்-ஸ்ட்ராஸ்ஸே ரேடாரின் சாதனையையும் இது முறியடித்துள்ளது.
இந்த ரேடார் பல விபத்துகள் நடைபெறும் நெடுஞ்சாலை சந்தியின் அருகே நிறுவப்பட்டுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் 2024 செப்டம்பரில் அந்தப்பகுதியின் வேக வரம்பு 80 கிமீ/மணியிலிருந்து 60 கிமீ/மணியாகக் குறைக்கப்பட்டது. ஆனால் பலர் இந்த மாற்றத்தைக் கவனிக்காததால் அல்லது பின்பற்றாததால் தொடர்ந்து மீறல்கள் நடந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது. “புதிய வேக வரம்பு மதிக்கப்படவில்லை என்பதை உறுதியாக கண்டறிந்தோம்,” என விர்ஸ் கூறினார்.
60 கிமீ/மணி என்ற புதிய வேக எல்லைக் குறியின் 250 மீட்டர் தூரத்தில் இந்த ரேடார் அமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 240 பிராங்க் வரை விதிக்கப்படும் நிர்வாக அபராதங்களிலிருந்தே இந்த 700,000 பிராங்க் வசூல் ஏற்பட்டுள்ளது. அதிகபட்ச அபராதம் எல்லா சம்பவங்களிலும் விதிக்கப்படாததை கருத்தில் கொண்டால் குறைந்தது 5,000 ஓட்டுநர்கள் அபராதம் பெற்றிருக்கலாம் என கணக்கிடப்படுகிறது. மேலும், வேகத்தை 20 கிமீ/மணிக்கு மேல் மீறுவோருக்கு குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும். இந்த ரேடார் விபத்துகளை குறைத்ததா என்பது குறித்து தற்போது உறுதியான மதிப்பீடு இல்லை.

உயர் வருவாய் ஈட்டப்பட்டதையடுத்து நகர நிர்வாகத்துக்கு சிலர் விமர்சனங்களும் எழுப்பியுள்ளனர். நகரம் தனது நிதியை ஓட்டுநர்களின் செலவிலேயே நிரப்ப முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு சிலரிடமிருந்து எழுந்துள்ளது. க்லோட்டன் போன்ற மற்ற நகரங்களில், ரேடார் எங்கு வைக்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிவிப்பதும் வழக்கம். அங்கு “பெர்டினாண்ட்” என அழைக்கப்படும் அந்த ரேடார் இடம் மாறிக் கொண்டே இருக்கும், மேலும் அதன் இருப்பிடம் போலீஸ் இணையதளத்தில் வெளியிடப்படும்.
ஆனால் விண்டர்தூரில் நிலைமை வேறுபட்டதாக விர்ஸ் விளக்குகிறார். “நாங்கள் நகரம் முழுவதும் வேக வரம்புகள் மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பாதுகாப்பை கட்டுப்படுத்துவதே எங்கள் நோக்கம் அல்ல. அதனால் ரேடார் எங்கு வைக்கப்படுகிறது என்பதை நாங்கள் முன்கூட்டியே அறிவிப்பதில்லை,” என்று அவர் கூறினார்.
இந்த விவகாரம் போக்குவரத்து பாதுகாப்பு, நகர நிதி மற்றும் ஓட்டுநர்களின் விழிப்புணர்வு குறித்து சுவிஸ் அளவில் மீண்டும் ஒரு பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
© Tages Anzeiger