சுவிட்சர்லாந்தின் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதிக்கும் சுங்கவரி 15% ஆக குறைப்பு
சுவிட்சர்லாந்து ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா விதித்து வந்த 39% வரி 15% ஆகக் குறைக்கப்பட உள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவி வந்த வர்த்தக சுங்க விவகாரத்தில் இதுவொரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
சுவிட்சர்லாந்து அரசாங்கம் இந்த முடிவை உறுதிப்படுத்தி, அமெரிக்காவுடன் எட்டப்பட்ட புதிய இணக்கப்பாடு நாட்டின் ஏற்றுமதி துறைக்கு பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்த செயல்பாட்டுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்க்கு அரசாங்கம் நன்றி தெரிவித்திருப்பது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தால், ஐரோப்பிய ஒன்றியம் அனுபவிக்கும் அளவிலான சுங்க வரி நிவாரணத்தை சுவிட்சர்லாந்தும் பெறும். குறிப்பாக இயந்திரங்கள், மருந்துகள் மற்றும் உயர்தர உற்பத்தி சாதனங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்ற சுவிஸ் நிறுவனங்களுக்கு இது குறிப்பிடத்தக்க நன்மையாக இருக்கும்.

சுவிட்சர்லாந்தின் பொருளாதார அமைச்சர் கய் பெர்மிலெய்ன் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜெமிசன் கீரெர் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விளைவாக இந்த புதிய ஒப்பந்தம் உருவாகியுள்ளது. பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதோடு, வரி குறைப்பைச் சார்ந்த மேலதிக விளக்கங்களை வழங்க அரசாங்கம் விரைவில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
சுங்கவரி குறைப்பால் அமெரிக்க சந்தையில் சுவிஸ் பொருட்கள் மேலும் போட்டித்திறன் பெறும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கூடுதலாக, சில சுவிஸ் உற்பத்தி நிறுவனங்கள் எதிர்காலத்தில் தங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை அமெரிக்காவுக்கு மாற்றுவதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளதாக பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவு இரு நாடுகளின் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.