சுவிஸ் குழந்தைகளும் இளம்பருவத்தினரும் அதிக கொழுப்பு–சர்க்கரை உணவில் ஈடுபாடு; 13% பேர் அதிக எடை – புதிய ஆய்வு எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் குழந்தைகளும் இளம்பருவத்தினரும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களில் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள் என புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. மாமிசம், அதிக கொழுப்பு, சர்க்கரைப்பொருட்கள் மற்றும் இனிப்புகள் அதிகம் எடுத்துக்கொள்ளப்படுகின்றன; ஆனால் பழம், காய்கறி போன்ற அடிப்படை சத்துக்கள் குறைவாக உள்ளன. இது நீண்டகால ஆரோக்கியத்திற்கு கவலைக்குரிய நிலைமையாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
“menuCH-Kids” எனப்படும் இந்த ஆய்வை சுவிட்சர்லாந்தின் உணவு பாதுகாப்பு மற்றும் விலங்கு நல அலுவலகமான USAV மேற்கொண்டுள்ளது. 6 முதல் 17 வயதுக்கிடைப்பட்ட 1,852 குழந்தைகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அதில் சுமார் 13% குழந்தைகள் அதிக எடையுடனோ பெருந்தொப்பையுடனோ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் இளம்பருவத்தினர்களில் புரதச்சத்து உட்கொள்தல் கூடுதல் அளவில் உள்ளதும், கொழுப்பு உணவின் அளவு பரிந்துரைக்கப்பட்ட உச்சவரம்பை எட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆய்வில், 10% குழந்தைகளின் இரத்தத்தில் நீரிழிவு நோய் உருவாகும் அபாயத்தைக் காட்டும் மதிப்புகள் பதிவானது கவலைக்குரியதாக கருதப்படுகிறது. நீரிழிவு நோய் உலகளவில் இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் நிலையில், சுவிட்சர்லாந்திலும் இதற்கான அறிகுறிகள் ஆரம்ப கட்டத்திலேயே தென்படுவது நிபுணர்களை அதிரவைத்துள்ளது.

பழங்கள், காய்கறிகள் போன்ற முக்கிய சத்துக்கள் சராசரிக்கு குறைவான நிலையில் உள்ளன. அதற்கு பதிலாக மாமிசம், இனிப்புகள், குளிர்பானங்கள் போன்றவை அதிகமாக சேர்க்கப்படுகின்றன. இதனால் உணவு சீர்கேடு மட்டுமன்றி, குழந்தைகளின் சக்தி சமநிலையும் சீர்குலையக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே நேரத்தில், சுவிட்சர்லாந்தில் தாய்ப்பால் ஊட்டல் தொடர்பான பழக்கவழக்கங்கள் மேம்பட்டு வருவதாக Swiss Infant Feeding Study எனப்படும் மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. 1,269 தாய்மார்களைப் பொருண்மையாகக் கொண்ட இந்த ஆய்வில், பிறந்த முதல் நான்கு மாதங்கள் முழுவதும் தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படுகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 5வது முதல் 7வது மாதங்களுக்கு இடையில் வேகவைத்த காய்கறிகள் போன்ற இணை உணவுகள் அறிமுகப்படுத்தப்படும் நடைமுறை தொடர்ந்து நிலைக்கிறது.
இரண்டு ஆய்வுகளும் சேர்ந்து பார்க்கும் போது, குழந்தைகளின் ஆரம்ப வளர்ச்சி கட்டங்களில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், பள்ளிப்பருவத்திற்கு சென்றபின் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் அதிகரிக்கின்றன என்பது தெளிவாகிறது. உணவு தேர்வில் மாற்றங்கள், பள்ளிகளில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் பெற்றோர் பங்குபற்றுதல் அதிகரித்தால் மட்டுமே இந்நிலைமைக்கு மாற்றம் ஏற்படும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.