சுவிட்சர்லாந்தில் குழந்தை பெற விரும்பாத தம்பதிகள் : பிறப்பு வீதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிவு.!
சுவிட்சர்லாந்தில் பிறப்பு விகிதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், ஒவ்வொரு பெண்ணும் சராசரியாக 1.29 குழந்தைகளையே பெற்றுள்ளனர் என சுவிஸ் கூட்டாட்சி புள்ளிவிவர அலுவலகம் (UST) வெளியிட்ட சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிகக் குறைந்த அளவாகும்.
இத்தகவல், குறிப்பாக 20 முதல் 29 வயதுக்கிடையிலான இளைஞர்கள் மத்தியில் பெற்றோராக மாறும் விருப்பம் கணிசமாக குறைந்திருப்பதை காட்டுகிறது. 2013 ஆம் ஆண்டில் குழந்தைகள் வேண்டாம் என்று கூறிய இளைஞர்கள் 6 சதவீதம் மட்டுமே இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் அது 17 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோன்ற போக்கு 30 முதல் 39 வயது வரையிலானவர்களிடமும் காணப்படுகிறது — இக்குழுவில் குழந்தை பெற விருப்பமற்றவர்களின் விகிதம் 9 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆய்வின்படி, கடந்த சில ஆண்டுகளில் மூன்றாவது குழந்தை பிறப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. பெரும்பாலான சுவிஸ் குடும்பங்கள் இரு குழந்தைகளுடன் வாழும் குடும்ப மாதிரியைப் பின்பற்றுகின்றன என இது காட்டுகிறது. 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் முதலாவது குழந்தை பிறப்புகள் 8.5 சதவீதம், இரண்டாவது குழந்தை பிறப்புகள் 9 சதவீதம் குறைந்துள்ளன. மூன்றாவது குழந்தை பிறப்புகளில் 13.6 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது; நான்காவது மற்றும் அதற்குப் பின் பிறந்த குழந்தைகளின் விகிதம் 5.8 சதவீதம் குறைந்துள்ளது.
பின்னணி தரவுகளின் படி, கடந்த பத்து ஆண்டுகளில் 35 முதல் 39 வயது பெண்களின் மகப்பேறு விகிதம், 25 முதல் 29 வயது பெண்களை விட அதிகமாக இருந்துள்ளது. இதனால் சுவிட்சர்லாந்தில் தாமதமாக குழந்தை பெறும் விகிதம் அதிகரித்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.
நிபுணர்கள் இதை சுவிட்சர்லாந்தின் சமூக அமைப்பில் நிகழும் மாற்றத்தின் பிரதிபலிப்பாகக் காண்கின்றனர். வாழ்வு செலவு, வேலை அழுத்தம், குழந்தை பராமரிப்பு செலவு போன்ற காரணிகள் சுவிஸ் இளைஞர்களின் குடும்பத் தீர்மானங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அவர்கள் மதிப்பிடுகின்றனர்.