சுவிட்சர்லாந்தில் அதிர்ஷ்டம் மலர்ந்தது – லொட்டோவில் மில்லியன் ஃபிராங்க் வெற்றி
சுவிட்சர்லாந்தில் நடந்த “Swiss Lotto” சீட்டிழுப்பில் ஒருவரின் வாழ்க்கை ஒரே இரவில் மாறிவிட்டது. இந்த வார தொடக்கத்தில் பெற்ற இழுப்பில், அதிர்ஷ்டசாலி ஒருவரின் சீட்டு 41 மில்லியன் சுவிஸ் ஃபிராங்க் பரிசை வென்றுள்ளது.
அந்த நபர் தேர்ந்தெடுத்த எண்கள் 10, 13, 21, 24, 31 மற்றும் 37 எனும் ஆறு முக்கிய எண்களும், அதிர்ஷ்ட எண் 1-ம் முழுமையாகப் பொருந்தியதாக Swiss Lotto அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் அவர் மொத்தம் 40,908,167.85 சுவிஸ் ஃபிராங்க் (சுமார் 41 மில்லியன்) வென்றுள்ளார்.
இதே சீட்டிழுப்பில், மற்ற 14 போட்டியாளர்களும் தலா சுமார் 7,000 ஃபிராங்க் பரிசு தொகை பெற்றுள்ளனர். இந்த வெற்றி சுவிஸ் லாட்டோ வரலாற்றில் இதுவரை நடைபெற்ற மிகப்பெரிய ஜாக்பாட்களில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இதற்கு முன்பு, 2024 மார்ச் மாதத்தில் சுவிஸ் லாட்டோவில் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றி பதிவாகியிருந்தது. அப்போது 64 மில்லியன் ஃபிராங்க் பரிசை சுவிட்சர்லாந்தின் ஜெர்மன் மொழிப் பகுதி அல்லது டிசினோ கண்டோனில் வசித்த ஒருவர் கைப்பற்றியிருந்தார்.
SwissLotto நாடு முழுவதும் பரவலாக விளையாடப்படும் அதிர்ஷ்ட விளையாட்டாகும். ஒவ்வொரு சீட்டிழுப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வதுடன், சிலர் வாழ்நாளையே மாற்றும் அளவுக்கு பெரிய பரிசு வென்றும் வருகிறார்கள். இந்த முறை 41 மில்லியன் ஃபிராங்க் வென்ற அதிர்ஷ்டசாலியின் அடையாளம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.