சுவிட்சர்லாந்தில் காலநிலை மாற்றம் கடுமையாகப் பாதிப்பு
உலக வெப்பமயமாதலால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து மாறி வருகிறது என்று மெட்டியோசுவிஸ் (MeteoSchweiz) வானிலை ஆய்வு மையமும், சூரிக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (ETH Zurich) இணைந்து வெளியிட்ட 2025 காலநிலை முன்னறிவிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் படி, தொழில்துறைப் புரட்சிக்கு முன் இருந்த காலத்துடன் ஒப்பிடும்போது சுவிட்சர்லாந்தில் வெப்பநிலை ஏற்கனவே சுமார் 2.9 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இது உலகளவில் பதிவாகியுள்ள சராசரி 1.3 டிகிரியை விட இருமடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“புதிய காலநிலை முன்னறிவிப்புகள், அடுத்த சில தசாப்தங்களில் சுவிட்சர்லாந்தில் ஏற்படவுள்ள மாற்றங்களை தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன. இதன் மூலம் சுற்றுச்சூழலை, நகரங்களை, விவசாயத்தையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை திட்டமிட முடியும்,” என உள்துறை அமைச்சர் எலிசபெத் பாம்-ஷ்னைடர் தெரிவித்தார்.

நிபுணர்கள் கூறுகையில், ஆல்ப்ஸ் மலைப்பகுதிகள் மற்றும் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவது சுவிட்சர்லாந்தின் வெப்பநிலை உயர்விற்கு முக்கிய காரணமாகும். இதனால் மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள், வெள்ளப்பெருக்கு, மற்றும் வறட்சி போன்ற இயற்கை விளைவுகள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து அரசு இதனை எதிர்கொள்ள பசுமை ஆற்றல், கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் திட்டங்கள் மற்றும் விவசாயத்திற்கான புதுப்பித்த உத்திகள் போன்ற பல நீண்டகால முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் , இத்தகைய மாற்றங்களை கட்டுப்படுத்த உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என்றும், தனிநாட்டின் முயற்சிகள் மட்டுமே போதாது என்பதும் வல்லுநர்களின் கூற்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
© KeystoneSDA