இத்தாலியில் ஸ்கி ஹெல்மெட் கட்டாயம் – சுவிட்சர்லாந்து சுற்றுலாப் பயணிகளுக்கும் தாக்கம்
இத்தாலி அரசு, பனிச்சறுக்கு விளையாட்டுகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், அனைத்து பனிச்சறுக்கு மலைப்பகுதிகளிலும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. புதிய விதி படி, ஸ்கி, ஸ்னோபோர்டுகளில் (Snow Board) ஈடுபடும் அனைவரும் ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும்.
இந்த விதி வரவிருக்கும் குளிர்கால சீசனிலிருந்து அமலில் வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் நோக்கம், விபத்துகள் மற்றும் தலையில் ஏற்படும் காயங்களை குறைப்பதாகும். கடந்த சில ஆண்டுகளில் இத்தாலியின் பனிச்சறுக்கு மையங்களில் ஏற்பட்ட பல விபத்துகளுக்குப் பின்னர், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில், அண்டை நாடான சுவிட்சர்லாந்தில் தற்போது ஹெல்மெட் அணிவது சட்டரீதியாக கட்டாயமில்லை. ஆனால் அங்கு பெரும்பாலான ஸ்கி மையங்கள் இதை வலியுறுத்தி பரிந்துரைக்கின்றன. குறிப்பாக, இத்தாலி எல்லையை ஒட்டியுள்ள சுவிட்சர்லாந்தின் செர்மட் (Zermatt) போன்ற பிரபலமான பனிச்சறுக்கு தளங்களில், சில பாதைகள் நேரடியாக இத்தாலி பனிச்சறுக்கு மலைப்பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இதனால், அந்த பகுதிகளில் சுவிட்சர்லாந்தில் இருந்து வரும் பயணிகளும், இத்தாலி விதிமுறையைப் பின்பற்றி ஹெல்மெட் அணிய வேண்டிய நிலை ஏற்படும். சுற்றுலா துறை நிபுணர்கள் தெரிவிப்பதாவது, இது சிறிய சிரமமாக இருந்தாலும், பயணிகளின் பாதுகாப்பிற்கும், சர்வதேச அளவில் ஒரே பாதுகாப்பு தரநிலையை உருவாக்குவதற்கும் உதவியாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
யூரோப்பில் பல நாடுகள் கடந்த சில ஆண்டுகளில் இதே போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஸ்கி விளையாட்டுகள் அதிக பிரபலமடைந்துள்ள நிலையில், ஹெல்மெட் கட்டாயம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பாதுகாப்பு கலாச்சாரமாக மாறி வருகிறது.
© KeystoneSDA