சுவிஸில் பொது மருந்துகள் வெளிநாட்டை விட பத்து மடங்கு விலை உயர்ந்தவை
சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவச் செலவுகளை குறைக்கும் நோக்கில், மக்களை அசல் மருந்துகளுக்குப் பதிலாக “ஜெனெரிக்” எனப்படும் பொது மருந்துகளைப் பயன்படுத்த ஊக்குவித்து வருகின்றன. ஆனால், அவற்றின் விலை சுவிஸில் இன்னும் ஐரோப்பாவில் மிக அதிகமாகவே உள்ளது.
பொது மருந்துகள் என்பது, மருந்தின் மூலக் கலவை அதேபோல இருந்தாலும், வணிகப் பெயர் மாறி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் மருந்துகளாகும். ஆனால் சுவிஸில் இவை குறைந்த விலை மாற்றாக இல்லாமல், பல வேளைகளில் அசல் மருந்துகளை விட கூடுதல் செலவாகி வருகின்றன என்பது சுகாதார நிபுணர்களின் கவலையாக உள்ளது.
ஜெனீவாவைச் சேர்ந்த சுகாதார நிபுணர் பேர்னார்ட் ஹிர்ஷெல் கூறுகையில், “பிரான்ஸ் அல்லது ஜெர்மனி போன்ற நாடுகளில் இம்மருந்துகள் மிகவும் எளிதில் கிடைக்கின்றன, மேலும் விலை மிகவும் குறைவாக உள்ளது. அதே நேரத்தில் சுவிஸில் விலை வேறுபாடு மிக அதிர்ச்சியளிக்கிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்: “சில பொது மருந்துகள் சுவிஸில் வெளிநாட்டை விட பத்து மடங்கு அதிக விலையில் விற்கப்படுகின்றன. இது அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது பெரும் வித்தியாசத்தை உருவாக்குகிறது, மேலும் இவ்வேறுபாடு குறைவதற்குப் பதிலாக நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.”
சுவிஸின் மருந்து விலை கட்டுப்பாட்டு கொள்கைகள், உற்பத்திச் செலவுகள் மற்றும் விநியோகச் சங்கிலி கட்டணங்கள் ஆகியவை இந்த விலை உயர்வுக்குக் காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன. இதனால், சுகாதாரச் செலவுகள் பொதுமக்களுக்கு பெரும் சுமையாக மாறி வருகின்றன.
பொது மருந்துகள் மக்கள் அனைவருக்கும் சுகாதாரச் செலவுகளை குறைக்கும் ஒரு நல்ல வழியாக இருந்தாலும், சுவிஸில் அதன் உயர்ந்த விலை காரணமாக அதன் நன்மைகள் இன்னும் பலருக்குக் கிடைக்காமல் போகிறது.
© KeystoneSDA