ஆர்காவ் மாநிலத்தில் கார் திருட்டு முயற்சி: இரு சந்தேகநபர்கள் கைது
அக்டோபர் 17, வெள்ளிக்கிழமை அதிகாலை சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாநிலத்தில் உள்ள கிப்-ஓபர்ஃப்ரிக் (Gipf-Oberfrick) பகுதியில், ஒரு குடியிருப்பாளர் தன் கண்காணிப்பு கேமரா (CCTV) மூலம், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன் நிறுத்தியிருந்த காரைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதை கவனித்தார். அவர் உடனடியாக காவல்துறையினரை தொடர்புகொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஆர்காவ் மாநில காவல்துறை மற்றும் கூட்டாட்சி சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத் துறை (Bundesamt für Zoll und Grenzsicherheit) இணைந்து விரிவான தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கின. சில நிமிடங்களில், லாந்த்ஷ்ட்ராஸ்சே (Landstrasse) பகுதியில் சந்தேக நபர் ஒருவரைக் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் 23 வயதான அல்ஜீரிய நாட்டு நபராக அடையாளம் காணப்பட்டார்.
அதன்பின், காவல்துறையினர் ஹோஃப்ஷ்ட்ராஸ்சே (Hofstrasse) அருகே இரண்டாவது நபரையும் பிடித்தனர். 19 வயதான அல்ஜீரிய நபர் ஒருவர் ஒரு புதருக்குள் மறைந்து இருந்ததாகவும், அவர் E-Trottinett மூலம் அங்கு வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

காவல்துறை தகவலின்படி, இருவரும் சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் வசித்து, தஞ்சம் கோரியிருந்தும் நிராகரிக்கப்பட்ட அகதிகள் ஆவர். அவர்களிடமிருந்து திருடப்பட்டிருக்கக்கூடிய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இருவரும் தற்போது காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மாநில வழக்கறிஞர் அலுவலகம் (Staatsanwaltschaft) இதுகுறித்து குற்றவியல் விசாரணை தொடங்கியுள்ளது.
வாகனங்களை எப்போதும் பூட்டிய நிலையில் வைத்திருக்கவும், அதற்குள் மதிப்புள்ள பொருட்களை விட்டு செல்ல வேண்டாமென்று ஆர்காவ் காவல்துறை பொதுமக்களுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது. சுவிட்சர்லாந்தில் சமீபத்தில் வாகன திருட்டு மற்றும் உடைமை மீதான சிறு குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதை முன்னிட்டு, காவல்துறை விழிப்புடன் இருக்குமாறு மக்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது.
© Kapo AG