பாசல் விமான நிலைய ரெயில் திட்ட நிதியிலிருந்து விலகிய பிரான்ஸ்
சுவிஸ் நாட்டின் பாசல் நகரத்துக்கு அருகிலுள்ள யூரோ ஏர்போர்ட் விமான நிலையம் உண்மையில் பிரான்ஸ் நாட்டின் செயிண்ட்-லூயி (Saint-Louis) என்னும் நிர்வாகப் பகுதியில் அமைந்துள்ளது. பாசல் நகரத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த விமான நிலையம் மூன்று நாடுகளின் எல்லைப் பகுதியில் செயல்படுவதால், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகியவை இணைந்து போக்குவரத்து திட்டங்களில் பங்கு கொள்வது வழக்கம்.
இந்த சூழலில், விமான நிலையத்திற்கான ரெயில் இணைப்பை அமைக்கும் திட்டம் 2027 ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் செலவுகள் அதிகரித்ததாலும், தேசிய மற்றும் பிராந்திய அளவிலான பட்ஜெட் சுமைகள் காரணமாக பிரான்ஸ் அரசு தற்காலிகமாக தனது நிதி பங்களிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. திட்டத்தின் மொத்த செலவு தற்போது சுமார் 475 மில்லியன் யூரோக்கள் ஆக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு எடுக்கப்பட்டதால், யூரோஏர்போர்ட் ரெயில் இணைப்புக்கான நிதியில் முக்கிய பங்கு குறைவதுடன், பாசல் பிராந்தியத்துக்கும் பெரிய சவாலாகியுள்ளது. “யூரோ ஏர்போர்ட்டுக்கு ரெயில் இணைப்பு பிராந்தியத்திற்கு மிக முக்கியமானது. இது அவசரத் தேவையுள்ள திட்டமாகும். இனி இந்தத் திட்டம் எவ்வாறு முன்னேற முடியும் என்பதை ஆராய வேண்டும்,” என பாசல் கட்டிடம் மற்றும் போக்குவரத்து துறையின் பேச்சாளர் நிக்கோல் ரிஃப் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்களின் பங்களிப்பை தொடரும் நிலையில், பிரான்சின் விலகல் திட்ட முன்னேற்றத்துக்கு தடையாக மாறியுள்ளது. மூன்று நாடுகளின் மக்களும் அதிகமாக பயன்படுத்தும் இந்த விமான நிலையத்துக்கு நேரடி ரெயில் இணைப்பு இல்லாதது பல ஆண்டுகளாகப் பிராந்திய அரசியலில் விவாதமாக இருந்து வந்தது. தற்போது நிதி சிக்கல் காரணமாக அந்த கனவு மேலும் தாமதமாகும் அபாயம் உருவாகியுள்ளது.
© KeystoneSDA