பிரியன்ஸ் கிராம மக்களின் நிரந்தர இடம்பெயர்வுக்கு அரசு ஆதரவு : 50 மில்லியன் நிதி ஒதுக்கீடு
சுவிட்சர்லாந்தின் கிறாவுன்டன் (Graubünden) மாநிலத்தில் அமைந்துள்ள பிரியன்ஸ் (Brienz) கிராமம், மலையிடிச்சரிவு ஆபத்தில் இருப்பதால் கடந்த ஆண்டு முதலே காலி செய்யப்பட்டது. இந்த கிராம மக்களை நிரந்தரமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான செலவு சுமார் 55.6 மில்லியன் ஃப்ராங்க் ஆகும் என்று மாநில அரசு கணக்கிட்டுள்ளது. இதற்கான நிதி உதவியாக 50 மில்லியன் ஃப்ராங்க் கடனை மாநில சபையிடம் அரசு கோரியுள்ளது.
முன்னெச்சரிக்கை அடிப்படையில் மக்கள் இடம்பெயர அனுமதிக்கப்படுகின்றனர். 2025 செப்டம்பர் மாத இறுதி வரை, வெளியேற்றப்பட்ட குடியிருப்போர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஆல்புலா (Albula) நகராட்சி, வீடுகள் மற்றும் சில அடிப்படை கட்டிடங்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. கூட்டாட்சி அரசும் திட்டச் செலவின் சுமார் 35 சதவீதத்தை ஏற்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியன்ஸ் கிராமம் கடந்த ஆண்டு முதல் கடுமையான நிலச் சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு சர்வதேச அளவீடுகள், ஒரு ஆண்டுக்கு 250 செ.மீ. அளவுக்கு நிலப்பகுதி நகர்ந்து வருவதாகக் காட்டின. இதனால் பல வீடுகள் குடியிருப்பதற்கே ஆபத்தான நிலையில் உள்ளன. அடிப்படை வசதிகளின் பராமரிப்பு செலவுகளும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையை சமாளிக்க, 2024 ஆம் ஆண்டிலிருந்து 2.3 கிலோமீட்டர் நீளமான வடிகால் சுரங்கம் தோண்டப்படுகிறது. சுமார் 40 மில்லியன் ஃப்ராங்க் மதிப்பிலான இந்த திட்டம், மலைப்பகுதியில் தேங்கும் நீரை வெளியேற்றி நிலச் சரிவை மெதுவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. சமீபத்திய அளவீடுகள், இந்தச் சுரங்கத் திட்டம் மூலம் நிலத்தின் நகர்வு வருடத்திற்கு 100 செ.மீ. க்குக் குறைவாகக் குறைந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
இந்த சுரங்கத்தால் பிரியன்ஸ் கிராமம் மட்டுமல்லாது சுற்றியுள்ள மாநிலச் சாலைகள், ரேஷியன் ரயில் பாதை, ஸ்விஸ்கிரிட் மற்றும் ஆக்ஸ்போ மின் இணைப்புகள் ஆகிய பல கட்டமைப்புகளும் பாதுகாப்பைப் பெறுகின்றன. சுரங்கம் 2027 இறுதிக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரியன்ஸ் கிராமத்தின் சுமார் 80 பேர் 2024 நவம்பர் மாதத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் குறிப்பிட்ட நேரங்களில் வீடுகளுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆகஸ்டில் மலையிடிச்சரிவு வேகம் அதிகரித்ததால் அது நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக அரசு ஒப்புக்கொண்டு, தற்போது விண்ணப்பிக்கப்பட்ட கடன், நிரந்தரமாக வெளியேற விரும்புவோருக்கு பொருளாதார உதவியாக பயன்படுத்தப்படும் என விளக்கியுள்ளது.
© rbu/sda