சூரிச் மிருகக்காட்சி சாலையில் பிறந்த குட்டி யானை பரிதாப மரணம்.!
சூரிச் பூங்காவில் வாழ்ந்த “சாலி” என்றழைக்கப்பட்ட யானை குட்டி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளது. கடந்தவியாழன் அதிகாலை இந்த துயரமான சம்பவம் நடந்ததாக பூங்கா நிர்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
சாலி இரண்டு நாட்களுக்கு முன்பு தனது கூட்டத்தில் உள்ள பிற யானைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ஒரு விபத்தில் சிக்கியது. அந்த நேரத்தில் அதன் காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. உடனடியாக பூங்காவின் விலங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தாலும், சாலி மீண்டும் எழுந்து நிற்க முடியவில்லை. அது தனது தாயான “ஃபர்ஹா”வின் அருகில் படுத்துக் கொண்டு ஓய்வெடுத்த நிலையில், சில மணி நேரங்களில் இதயம் மற்றும் இரத்த ஓட்ட செயலிழப்பு காரணமாக உயிரிழந்தது.
சம்பவத்துக்குப் பிறகு, காரணம் கண்டறிய சாலியின் உடல் சூரிச் பல்கலைக்கழக விலங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட விரிவான பரிசோதனையில், குட்டி யானை குடல் முறிவு (Dünndarmverdrehung) காரணமாக இறந்தது என்று கண்டறியப்பட்டது. வலி மற்றும் மன அழுத்தம் காரணமாக இத்தகைய சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு எப்போதும் உள்ளது என்று விலங்கியல் நிபுணர்கள் விளக்கினர்.

பூங்கா இயக்குநர் சேவரின் ட்ரெஸ்ஸென், “இது மிகவும் துயரமான செய்தி. எவ்வளவு சிகிச்சை அளித்தாலும் சில சமயங்களில் இயற்கைத் தானே கடுமையான விளைவுகளை உருவாக்குகிறது. சாலி எங்கள் பூங்கா குடும்பத்தின் அன்புக் குட்டி. அதை இழந்தது எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு” என்று தெரிவித்தார்.
சூரிச் பூங்காவில் பிறந்த யானை குட்டிகள் பொதுவாக பார்வையாளர்களின் அன்பையும் கவனத்தையும் பெறுகின்றன. சாலியின் திடீர் மரணம் பூங்கா பணியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் விலங்கு ஆர்வலர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
© KeystoneSDA