வின்டர்தூரில் 22 வயது நபர் தாக்கப்பட்ட வழக்கு – 6 சிறுவர்கள் கைது
சுவிட்சர்லாந்தின் சூரிக் கண்டோன் போலீசார், 15 முதல் 17 வயதுக்குட்பட்ட ஆறு சிறுவர்களை கைது செய்துள்ளனர். இவர்கள், ஒரு நபரை தாக்கியதாகவும், அவமானப்படுத்தியதாகவும் கடுமையாக சந்தேகிக்கப்படுகின்றனர். தற்போது, இவர்கள் அனைவரும் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு சிறுவர் நீதிமன்றத்தின் கீழ் நடத்தப்படுகிறது.
சம்பவம் 2024 நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம், 22 வயது சுவிஸ் நாட்டு நபர் ஒருவர், ஒரு சிறுமியைச்சந்திக்கவேண்டுமென வின்டர்தூருக்கு அழைக்கப்பட்டார். ஆனால், அவர் சென்றபோது அங்கு சிறுமி யாரும் இல்லை. பதிலாக, ஒரு சிறுவர் குழு அங்கு காத்திருந்தது. அவர்கள் அந்த நபரை காலை வாரி குத்தி தாக்கி, காயமடையச் செய்து, அவமானப்படுத்தினர். தாக்குதலின் காட்சியை வீடியோவாகப் பதிவுசெய்தும் இருந்தனர்.
இந்த வழக்கில், சூரிக் கண்டோன் போலீஸ் மற்றும் வின்டர்தூர் சிறுவர் வழக்கறிஞர் அலுவலகம் இணைந்து விசாரணை மேற்கொண்டது. அதன் மூலம், தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஆறு சிறுவர்களையும் அடையாளம் கண்டு கைது செய்தனர்.

இதற்குமுன், 2025 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை வின்டர்தூர் பகுதியில் நடந்த இதே போன்ற பல வன்முறைச் சம்பவங்கள் விசாரிக்கப்பட்டன. அதில், 16 முதல் 19 வயது வரையிலான சுவிட்சர்லாந்து, இத்தாலி, லெபனான், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அனைத்து சம்பவங்களிலும் ஒத்த செயல்முறை பின்பற்றப்பட்டது. சிறுவர்கள், தங்களுக்கு பாலியல் குற்றச்சாட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை இணையம் வழியாக தொடர்புகொண்டு, பொய்யான சந்திப்புகள் மூலம் களவுத்தனமாக சிக்கவைத்து, பின்னர் அவர்களை தாக்கினர்.
அதிகாரிகள், இத்தகைய “சுயநீதிக்கான நடவடிக்கைகளை” கடுமையாக கண்டித்துள்ளனர். இளைஞர்கள் தங்களை “சிறுவர் பாலியல் துஸ்பிரயோகக்காரர்களுக்கு எதிரான வேட்டை” எனக் கருதினாலும், இத்தகைய தனிநபர் நீதியியல் நடவடிக்கைகள், அதிகாரப்பூர்வ விசாரணைகளை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், மேலும் வன்முறையை உருவாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளனர்.
© Kapo ZH