சுவிட்சர்லாந்தில் விமானங்களின் நேரந்தவறாமை அதிகரித்துள்ளது
சுவிட்சர்லாந்து வான்பரப்பில் பறக்கும் விமானங்களின் எண்ணிக்கை தற்போது கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது. மேலும், விமானங்கள் நேரத்திற்கு புறப்படுதல் மற்றும் தரையிறங்குதலில் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் தற்போது சுமார் 95 வீதமான விமானங்கள் நேரத்திற்கு இயங்குகின்றன. 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுவிஸ் வான்பரப்பு கட்டுப்பாட்டுச்சேவை நிறுவனமான ஸ்கைகயிட் Skyguide மொத்தம் 8,68,000 விமானங்களை கட்டுப்படுத்தியுள்ளது.
இதில் சுமார் 95 வீதமான விமானங்கள் நேரத்திற்கு புறப்பட்டதாகவும், தாமதங்களில் பெரும்பாலானவை வானிலை காரணமாக இருந்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 8 மில்லியன் சுவிஸ் பிராங்க் லாபம் ஈட்டியுள்ளது. கொவிட்-19 காலத்தில் சுவிஸ் கூட்டமைப்பிடம் பெற்ற 250 மில்லியன் பிராங்க் கடனை 2029க்குள் திருப்பிச் செலுத்தும் நம்பிக்கை இருப்பதாக ஸ்கைகயிட் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், நிறுவனம் மேற்கொண்டு வரும் வேர்ச்சுவல் சென்டர் ‘Virtual Center’ டிஜிட்டல் திட்டம் 2027க்குள் அடிப்படை அமைப்பு முடிக்கப்பட்டுவிடும் எனவும், அது முழுமையாக சுயநிதியால் நிறைவேற்றப்படும் எனவும்ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு மே மாதத்தில் சுவிஸ் மத்திய அரசாங்கத்தின் கணக்காய்வு அலுவலகம், இந்த திட்டம் 2031க்குள் மட்டுமே நிறைவேறக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
@Swissinfo