சுவிட்சர்லாந்தில் தேடப்பட்டுவந்த குற்றவாளி ஸ்பெயினில் கைது
ஸ்பெயின் – மலோர்காவில் தேசிய போலீசார் நடத்திய சோதனையில், சுவிட்சர்லாந்து மற்றும் லக்ஷம்பர்க் அதிகாரிகள் தேடி வந்த ஒரு மோசடி சந்தேகநபர் கைதானார். ஐரோப்பிய கைது வாரண்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோசடி – போலி ஆவணங்கள் – கோடிக்கணக்கான நஷ்டம்
அந்த நபர் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை ஏமாற்றி, மொத்தத்தில் ஒரு மில்லியன் யூரோவைத் தாண்டும் நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள்,போலி மருத்துவச் சான்றுகள், தவறான தொழில் உரிமங்கள் என பல்வேறு முறைகளில் அவர் மோசடி நடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

லக்சம்பர்கில், சந்தேகநபர் பொய்யான மருத்துவச் சான்றுகளை சமர்ப்பித்து, சுமார் 90 ஆயிரம் யூரோ இழப்பீடு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுவிட்சர்லாந்தில், அவரது மோசடிகள் ஒரு மில்லியன் ஃப்ராங்கிற்கு மேல் சென்றுள்ளது.
- இல்லாத “ஊனமுற்ற நிலைக்கு” இழப்பீடு பெற்றார்.
- நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து பணம் செலுத்தாமல் பணிகளை பெற்றார்.
- சுகாதாரத் துறையில் போலி தொழில் உரிமங்கள் பெற்றார்.
மேலும், மருத்துவ அலட்சியம் காரணமாக ஒரு நோயாளிக்கு சேதம் விளைவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மலோர்காவில் கைது – போலி அடையாள ஆவணங்கள் பறிமுதல்
மலோர்காவின் ஒரு சிறிய கிராமப்புற பகுதியில் மறைந்து இருந்த சந்தேகநபரை, சர்வதேச குற்றப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர். கைது செய்யும் தருணத்தில், அவர் போலியான அடையாள அட்டையும் டிரைவிங் லைசன்ஸும் காட்டி தப்பிக்க முயன்றார். ஆனால் போலீசார் உடனடியாக அதனை கண்டுபிடித்து கைது செய்தனர்.
கைது பிந்தைய நிலை
கைது செய்யப்பட்ட நபர் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில், அவர் தற்போது விசாரணை காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
@Spanish National Police