சுவிஸ் FRIBOURG மாநிலத்தில் பன்னாட்டு நாட்டுப்புற கலாச்சார விழா
FRIBOURG (ப்ரீபோர்க்) மாநிலம் மற்றும் பிராந்தியத்தின் பன்முக கலாச்சார விழாவான *Rencontre Volklorique International* நிகழ்வு, ஆகஸ்ட் 16, 2025 (சனிக்கிழமை) முதல் ஒருவாரகாலம் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழா சுவிட்சர்லாந்தின் பல்வேறு இன, மொழி, பண்பாட்டு சமூகங்களை ஒன்றிணைத்து அவற்றின் விழுமியங்களை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
**தமிழ்ச் சமூகத்துக்கு சிறப்பழைப்பு**
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் அனைவரையும் குடும்பங்களாகப் பங்கேற்க தமிழ் மன்றம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.. தமிழினத்தின் பண்பாட்டு சார்பு, இன அடையாளம் மற்றும் விழுமியங்களை நிலைநாட்டுவதோடு, அடுத்த தலைமுறையினரான நமது சிறுவர்களுக்கும் இவற்றைப் பற்றிய உணர்வை ஊட்டுவதே இந்தப் பங்கேற்பின் நோக்கம். மேலும், பள்ளி மற்றும் சமூகத்தின் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து இந்தப் பண்பாட்டு விழாவை முன்னெடுக்கும் நிலையில், குடும்பங்களின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

**இலங்கைச் சமூகத்தின் ஒற்றுமைக் காட்சி**
இந்த நிகழ்வின் மிக உணர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று, பல தசாப்தங்களாகப் போரால் பிளவுபட்ட இலங்கைத் தமிழர் மற்றும் சிங்கள சமூகங்கள், ஒரே கூரையின் கீழ் ஒற்றுமையுடன் கலந்துரையாடும் நிகழ்வாகும். இலங்கையின் பாரம்பரிய உணவுகள், பானங்கள், நறுமணங்கள் மற்றும் கலாச்சாரக் காட்சிகள் மூலம் அவர்களின் செழுமையான பண்பாட்டு அடையாளத்தை உலகம் அறியும் வாய்ப்பு கிடைக்கிறது.
இந்நிகழ்வில் குறிப்பிடத்தக்க வகையில் ஈழத்து கலைஞர்களின் இசைக்கச்சேரியும் இலங்கையின் பழமைவாய்ந்த பொருட்களின் கண்காட்சியும் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
“நம்பிக்கையும் ஒற்றுமையும் நிறைந்த இந்த வரலாற்று நிகழ்வின் ஒரு பகுதியாக எங்களுடன் இணைந்து கொண்டாடுங்கள்”** என FRIBOURG மாநிலத்தின் சர்வதேச கலாச்சார நிகழ்வுகள் குழு அன்புடன் அழைக்கிறது.