சுவிட்சர்லாந்தில் கடும் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் மேற்கு பகுதிகள் மற்றும் டிசினோவின் சில பகுதிகளுக்கு கடும் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெனீவா ஏரி பகுதி, வலைஸ், த்ரீ-லேக்ஸ் பகுதி, ஃப்ரிபோர்க்கில் உள்ள ப்ரோயே மற்றும் டிகினோ கன்டோன் ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளாகும் என இயற்கை பேரிடர் இணையதளம் தெரிவிக்கிறது.
சராசரி நாளாந்த வெப்பநிலை 25 பாகை செல்சியஸை விடவும் அதிகமாக தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 800 மீட்டர் உயரத்திற்கு கீழே உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில், புதன்கிழமை மாலை வரை அதிகபட்ச வெப்பநிலை 32-35 பாகை செல்சியஸ் மற்றும் 35-45% ஈரப்பதம் எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பிற பகுதிகளுக்கு, ஆபத்து மிதமானதாகவோ அல்லது இல்லாததாகவோ கருதப்படுகிறது. இருப்பினும், மத்திய பீடபூமி பகுதியில் வெப்பநிலை சில சமயங்களில் 34 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வாலைஸ் கன்டோனின் சில பகுதிகளில் காட்டுத் தீ ஆபத்து அதிகமாக காணப்படுவதாகவும், விஸ்ப் பள்ளத்தாக்கு, சிம்ப்ளான் நோர்ட் மற்றும் லோட்ஸ்பெர்க்கின் தெற்கு பகுதிகளில், அரசாங்கம் மிக உயர்ந்த ஆபத்து நிலை 5ஐ அறிவித்துள்ளது.
தீ எந்த நேரத்திலும் ஏற்பட்டு, நீண்ட காலத்திற்கு வேகமாக பரவக்கூடும் என்பதால், வெளியில் தீ மூட்டுவதை தவிர்க்க வேண்டும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.