சுவிட்சர்லாந்தில் மீண்டும் வெயிலுடன் கூடிய காலநிலை
சுவிட்சர்லாந்து, கோடையில் இலையுதிர் காலநிலையிலிருந்து மீண்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 5, முதல் வெப்பநிலை உயரத் தொடங்கியுள்ளது. வார இறுதியில் வெயிலும் உயர் வெப்பநிலையும் நிலவும்.
மெடியோசுவிஸ் வானிலை நிபுணர் ஆண்ட்ரியாஸ் ஆஷ் கூறுகையில், “தெற்கிலிருந்து வெப்பமான காற்று நம்மை வந்தடைகிறது.” இந்த காற்று ஸ்பெயின் அல்லது வட ஆப்ரிக்காவிலிருந்து வருகிறது. வியாழக்கிழமை 28 டிகிரியும், வெள்ளிக்கிழமை 30 டிகிரியும் எதிர்பார்க்கப்படுகிறது. வார இறுதியும் திங்களும் 29 டிகிரி வெப்பமாக இருக்கும்.

ETH ஆராய்ச்சியாளர் சோனியா செனிவிரட்னே, ஆகஸ்டில் ஹீட்வேவ் (HeatWave) வரலாம் என்று கூறினார். ஆனால், “சில வெப்பமான நாட்கள் மட்டும் ஹீட்வேவ் ஆகாது. சராசரி வெப்பநிலை சில நாட்களுக்கு 25 டிகிரியை தாண்ட வேண்டும்,” என்று ஆஷ் விளக்கினார். அடுத்த பத்து நாட்களில் இது நிகழ வாய்ப்பில்லை.
மேற்கு சுவிட்சர்லாந்து மற்றும் ஆல்ப்ஸ் தெற்கு பகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேல் உயரலாம். அடுத்த வாரம் மழையுடன் குளிர்ச்சி ஏற்படலாம், ஆனால் வெப்பநிலை இயல்பை விட உயர்ந்தே இருக்கும். இந்த ஆண்டு ஜூனில் முதல் ஹீட்வேவ் ஏற்பட்டு, சில ஏரிகள் 28 டிகிரி வரை வெப்பமடைந்தன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.