பீட்சா கடைகள் மூலமாக மாபியா குழு சட்டவிரோத பண சுழற்சி
சுவிட்சர்லாந்து-பிரான்ஸ் எல்லை அருகே உள்ள இரண்டு பீட்சா கடைகள், குற்றவாளிகள் “பணம் சுத்திகரிப்பு மோசடியில்” ஈடுபட பயன்படுத்திய மையங்களாக இருந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், Saint-Julien-en-Genevois (சாஞ்-ஜுலியன்-ஆன்-ஜெனிவாய்ஸ்) மற்றும் Haute-Savoie (ஓட்-சாவோயி)பகுதிகளில் உள்ள மூன்று உணவகங்களை மையமாகக் கொண்டு, ஐந்து குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மாபியா பின்னணியுடன் தொடர்புடையவர்கள் என்றும், பணப்பரிவர்த்தனை மோசடி மற்றும் சட்டவிரோத பணம் சுழற்சி செய்தது என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடந்தது. இதில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி மற்றும் இன்டர்போல் போன்ற சர்வதேச அமைப்புகள் இணைந்து செயல்பட்டன.

அதிகாரிகள் தெரிவிக்கும்போது, குற்றவாளிகள் 300க்கும் மேற்பட்ட போலி ஊழியர்களின் பெயர்களில் சம்பளம் செலுத்தும் மாதிரியை உருவாக்கி, அதன் வழியாக சட்டவிரோத பணங்களை ஒழுங்குபடுத்தியதாகவும், பீட்சா விற்பனை எண்ணிக்கையை செயற்கையாக உயர்த்தி அதை சட்டபூர்வ வருமானமாக காட்டியதாகவும் கூறினர்.
இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சட்ட ரீதியாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிராகரித்து வருகின்றனர். இருப்பினும், அவர்கள் இத்தாலியின் முக்கியமான இரண்டு மாபியா தலைவர்களுடன் நேரடி குடும்ப உறவு கொண்டவர்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
@WRS