சூரிச் நகரில் கத்தியுடன் அச்சுறுத்தல் விடுத்த நபரால் பரபரப்பு.! (வீடியோ)
சூரிச் நகரில் உள்ள பெல்வியூ (Bellevue) பகுதியில் ஜூன் 20 ஆம் தேதி பிற்பகலில் நடந்த ஒரு ஆபத்தான சம்பவம், பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர், தனது கையில் நீண்ட கத்தியுடன், மக்கள் நடமாடும் இடத்தில் திரிந்ததோடு, அருகில் சென்ற பொதுமக்களை இனம் சார்ந்த, அவமதிக்கும் வார்த்தைகளால் இழிவுபடுத்தியுள்ளார்.
சம்பவம் நடந்த இடம் மிகப் பொதுவான பகுதியான சூரிச் Trampavillon, பெல்வியூ, பகுதியில் இடம்பெற்றுள்ளது.. அந்த நபர் ஒருசிலரிடம் நேரடியாக எதிரே சென்று பயமுறுத்தும் வகையில் நடந்துகொண்டார், இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த நேரத்தில் ஒரு நபர் கைபேசியில் போலீசை அழைக்கும் முயற்சி எடுத்த போது, கத்தியுடன் வந்த நபர் அதையும் கண்டித்து, ‘போலீசை கூப்பிடு பாப்போம்’ என்று மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போது, அதை வீடியோவில் பதிவு செய்த ஒருவர் அந்த காட்சிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டதை, பலர் விமர்சிக்கத் தொடங்கினர். சிலர், “இந்த மாதிரி பயங்கர நிலைமையில் வீடியோ எடுப்பதற்குப் பதிலாக போலீசை அழைத்திருக்கலாம் அல்லது யாராவது உதவியிருக்கலாம்” என தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், சூரிச் நகர காவல் துறையினர் (Stadtpolizei Zürich), தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் மார்க் ஸுர்பர் (Marc Surber) கூறியதுப்படி, அந்த நபர் ஒரு கடுமையான மனநல சிக்கலில் இருந்ததால், அவரை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர்.
எந்த வகையான கத்தி என்பதற்கான விவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. இது போன்ற சம்பவங்கள், பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக கவலையை ஏற்படுத்தியுள்ளன.
@Nau