எதிர்வரும் விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசல்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளில் Summer விடுமுறைகள் தொடங்கியுள்ளதையடுத்து, கோத்தார்ட் சுரங்கப்பாதையில் (Gotthard-Tunnel) கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வார இறுதிகளில் – வெள்ளி முதல் ஞாயிறு வரை – நீண்ட நேரக் காத்திருப்புகள் மற்றும் வீதிச் சிக்கல்கள் தவிர்க்க முடியாதவை என்று சுவிஸ் தேசிய வீதித் துறை (ASTRA) எச்சரிக்கிறது.
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் மத்தியில் வரை, வடக்கு-தெற்கு திசைகளில் உள்ள A2 (கோத்தார்ட்) மற்றும் A13 (சான் பெர்னடினோ) சுரங்கப்பாதைகள் மிகுந்த போக்குவரத்தால் பாதிக்கப்படலாம். இதனடிப்படையில் பயணிகள், குறிப்பாக 1-ம் திகதி முதல் 3-ம் திகதி ஆகஸ்ட் வரை இருக்கும் பெரும் விடுமுறை அலையை மனதில் வைத்துக் கொண்டு, வார இறுதிகளில் கோத்தார்ட் வழியாக தெற்குப் பயணத்தைத் தவிர்க்க ஆலோசிக்கப்படுகிறது.
வழித் தேர்வுக்காக, சுவிஸ் தேசிய வீதித் துறை சான் பெர்னடினோ சுரங்கப்பாதை மற்றும் ஆல்ப்ஸ் மலை வழிகளை மாற்றுப் பாதைகளாக பரிந்துரைக்கிறது. இருப்பினும், இவைகளிலும் அதிகபட்ச போக்குவரத்து எதிர்பார்க்கப்படுகிறது.
@AFP
மேலும், சிம்ப்ளான் சுரங்கத்தில் (Simplon-Tunnel) சுவிஸ் ரயில்வே நிறுவனமான SBB புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதால், BLS கார்-ரயில் சேவை ஜூலை 27, 2025 வரை Brig (VS) மற்றும் இத்தாலியின் Iselle இடையே இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது. இதுவும் இரு திசைகளிலும் காத்திருப்பை அதிகரிக்கலாம்.
ரோமாண்டி பகுதியிலிருந்து இத்தாலிக்குச் செல்லும் பயணிகள் ஜெனீவாவிலிருந்து A40 வழியாக மொன் பிளாங்க் சுரங்கம் (Mont-Blanc Tunnel) வழியாக பயணிக்கலாம் என Touring Club Schweiz (TCS) பரிந்துரைக்கிறது. ஆனால், இங்கு கூட கோடை முழுக்க அதிரடியான போக்குவரத்து இருக்க வாய்ப்பு அதிகம்.
மேலும் ஜூலை மாதம் வார இறுதிகளில், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்திலிருந்து வாகனங்கள் கோத்தார்ட் வழியாக அதிகளவில் பயணிக்கும் என்பதால், இவை முக்கிய நெரிசல் நாட்களாக அமையும். வீதிகளில் நெரிசல் இருந்தாலும், பயணிகள் தாங்கள் செல்லும் பக்கவழி வெளியேறாமல், நெரிசலை பொறுமையுடன் எதிர்கொள்வது முக்கியம். இது உள்ளூராட்சி மக்கள் மீது மரியாதையை காட்டும் செயல் என்பதையும் சுவிஸ் தேசிய வீதித் துறை வலியுறுத்துகிறது.