ஜெனீவா விமான நிலையம் பயணிகளுக்காக புதிய ஏற்பாடு
ஜெனீவா விமான நிலையம் கோடை காலத்தில் பெரும் பயணிகள் கூட்டத்தை எதிர்நோக்கி முழுமையாக தயாராகிக் கொண்டிருக்கிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தலா 16 இலட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிக எண்ணிக்கையிலான பயணிகளின் வருகையை சீராக கையாளும் நோக்கில், பாதுகாப்பு சோதனை நுழைவாயில்கள் (security gates) திங்கட்கிழமை முதல் காலை 4 மணிக்கே திறக்கப்படும். இது வழக்கமான நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்பாக ஆகும். பயணிகள் சரியான நேரத்தில் செக்-இன் மற்றும் பாதுகாப்பு சோதனை முடித்து விமானத்தை தவறவிடாமல் பயணிக்க உதவ இது முக்கிய மாற்றமாகும்.

விமான சேவை நிறுவனங்களும் இந்த கோடை பருவ பயணத்திற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. குறிப்பாக ஈசிஜெட் (EasyJet) நிறுவனம், 120 புதிய கபின் பணியாளர்கள் மற்றும் 46 புதிய பைலட்டுகளை பணியில் சேர்த்து, தனது சேவையில் தடையின்றி செயல்பட உறுதி செய்துள்ளது.
ஐரோப்பிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான யூரோகண்ட்ரோல் (Eurocontrol) நிறுவனம், இந்த கோடை பருவத்தில் விமான போக்குவரத்து 4 சதவிகிதம் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய சுற்றுலா நாடுகளுக்கான விமானச் சேவைகளில் அதிகமான பயணிகள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் தங்கள் பயணத்தை சீராகச் செய்ய, முன்பதிவு, ஆன்லைன் செக்-இன், பாதுகாப்பு வழிமுறைகள் ஆகியவற்றை பயணத்திற்கு முன் சரிபார்த்து நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்யப்படுகிறது.