சூரிச் தெரு அணிவகுப்பில் பல்வேறு குற்றச்செயல்கள் : 29 பேர் கைது.!! சூரிச் தெரு அணிவகுப்பில் (street-parade) பல்வேறு குற்றச்செயல்கள் : 29 பேர் கைது.!! சனிக்கிழமை அன்று சூரிச்சில் இடம்பெற்ற மிகப்பிரமாண்டமான தெரு அணிவகுப்பு பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெற்றது. இருப்பினும், பல்வேறு குற்றங்களுக்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டுகளைப் போலவே, ஜூரிச் நகர காவல்துறை அறிவித்தபடி, மாலை மற்றும் இரவு நேரங்களில் வாக்குவாதங்கள் பற்றிய முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அது மாத்திரமின்றி இந்த ஆண்டும் அதிகளவில் திருட்டு புகார்கள் பதிவாகியுள்ளன. 34 வயதான ரோமானியரிடம் இருந்து 30 செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சூரிச் கன்டோனல் போலீசார் அறிவித்துள்ளனர்.

போலீசாரின் அறிக்கையில் சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு முன்பு 38 வயதான சுவிஸ் நபர், மற்றும் இரண்டு இளைஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாலிபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு காயம் அடைந்தார். இதுபற்றி சூரிச் கன்டோனல் காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கின.
நள்ளிரவுக்குப் பிறகு, 21 வயதுடைய ஒரு நபர் பலரால் தாக்கப்பட்டதில் தலையில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். பாதுகாப்பு மற்றும் மீட்பு படையினர் உட்பட சூரிச்சின் துணை மருத்துவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அது மாத்திரமின்றி போதைப்பொருள் மற்றும் பாலியல் குற்றங்களும் இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் புலனாய்வாளர்கள் பல்வேறு போதைப்பொருட்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. மேலும் இடம்பெற்ற பாலியல் குற்றங்கள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீச்சல் வீரர்கள் காணாமல் போனதாகவும் புகார் கூறப்பட்டதால், நீர்நிலை போலீசார் பலமுறை ஆற்றில் தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
சட்டவிரோத மது விற்பனை, சுங்கக் குற்றங்கள் மற்றும் விருந்தோம்பல் தொழில் சட்டத்தின் தனிமைப்படுத்தப்பட்ட மீறல்கள் ஆகியவற்றிற்காக பன்னிரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
மேலும் 18 பேர் சூரிச் பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த ஆண்டு காவல்துறை நடவடிக்கைகளுக்கும் ட்ரோன்கள் பெரும் உதவியாக இருந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.