வாட் மாகாணம் இளைஞர்கள் மத்தியில் இ-சிகரெட் பயன்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.
இதன் அடிப்படையில் ‘வாட் மாகாணம் சிறார்களுக்கு மின்னணு சிகரெட்டுகளை விற்பனை செய்வதை தடை செய்கிறது. இந்த பொருட்களை பொதுவெளியில் விளம்பரப்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புகையிலை பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகள், மற்றும் பிற தொடர்புடைய பொருட்கள், நிகோடின் உள்ளதோ இல்லையோ, இனி விற்பனை செய்யவோ அல்லது சிறார்களுக்கு வழங்கவோ கூடாது என மாநிலங்களவை இன்று 09/7/24 செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
ஜூலை 15 முதல் இந்த சட்டம் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றின் நுகர்வு இப்போது பொது இடங்களில் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு ஏற்ப விற்பனை நிலையங்களுக்கு மாறுதல் காலம் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது. சிறார்களுக்கான விற்பனை மற்றும் விநியோகத்தை தடை செய்வதுடன், ஐடியைப் பயன்படுத்தி வாங்குபவர்களின் வயதை சில்லறை விற்பனையாளர்கள் சரிபார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில் கிராண்ட் கவுன்சில், சட்டத்தில் ஒரு மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதனால் சாதாரண சிகரெட் மற்றும் புகையிலை போன்ற சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டு டிஸ்போஸ்பிள் அதாவது இ-சிகரெட்டுகளும் அடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இ-சிகரெட்டுகளை விற்கும் போது சிறார்களைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் தற்போது மத்திய அரசில் இல்லை. ஆனால் பல்வேறு மண்டலங்களில் சிறார்களுக்கு விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மேற்கு சுவிட்சர்லாந்தில் இத்தகைய தடையை அறிமுகப்படுத்திய கடைசி மண்டலம் வாட் கன்டோன் என்பது குறிப்பிடத்தக்கது.