வலைஸ் கன்டோன் முடக்கம் – வெளியான முக்கிய அறிவிப்பு சுவிட்சர்லாந்தின் வலைஸ்சில் கன்டோனில் சீரற்ற காலநிலையினால் பாரியளவு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மழை வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் சீரற்ற காலநிலை காரணமாக பாரியளவில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பலத்த காற்று காரணமாக சில பகுதிகளில் கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சில இடங்களில் நீர்மட்டம் உயர்வடைந்து செல்வதாகவும், ஏரிகளில் நிரம்பி வழியும் நீர், வீதிகளை உடைத்துக்கொண்டு செல்வதாகவும் குறிப்பிடப்படுகிறது. இன்று மே 22, காலை நிலவரப்படி, ஸ்டால்டன்-செயின்ட் நிக்லஸ் கன்டோனல் சாலை நேற்றைய தினம் மூடப்பட்டிருந்தது.
Photo Credits (c)@MarkusPfister (X)
எனினும் இன்று சனிக்கிழமை காலை 8:30 தொடக்கம் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை மாலை, நீடர்கெஸ்டெல்ன்-ஸ்டெக் பாதை வெள்ளம் காரணமாக மூடப்பட்டது.
அப் பாதையின் அடைப்பு நீக்கப்பட்டு அனைத்து போக்குவரத்துக்கும் இன்று சனிக்கிழமை காலை திறக்கப்பட்டுள்ளது. இன்னும் பல வீதிகள் மூடப்பட்டும் சில வீதிகள் துப்பரவு பணிகளும் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Photo Credits (c)@MarkusPfister (X)
சேர்மாட்டின் மேயர், நிலமைகள் பற்றி குறிப்பிடுகையில், நேற்று வெள்ளிக்கிழமை நிலமைகள் கடும் மோசமாக இருந்ததாக குறிப்பிடுகிறார். எனினும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி. எனினும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறமுடியாதவாறு நிலமைகள் மோசமாகவுள்ளது.
குழாய்கள் உடைந்து வெள்ளநீர் வீதிகளில் குப்பைகளை கொண்டுவந்து கொட்டி பாலங்கள் வடிகால்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இழப்புகளின் அளவு தற்போது கணிக்கமுடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை தொடக்கம் லேசான மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. மீட்பு மற்றும் துப்பரவு பணியாளர்கள் இரவு முழுவதும் சேவையில் ஈடுபட்டு சோர்வடைந்துள்ளதாகவும் மேலும் பணியாளர்கள் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்டோனல் நிர்வாகம் மக்களுக்கு முக்கிய அறிவித்தல் சிலவற்றையும் விடுத்துள்ளது: -உங்கள் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். -நீர்நிலைகளில் இருந்து விலகி இருங்கள். -பாலங்களில் உங்கள் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம். -கடுமையான வானிலை நிகழ்வுகளை படமெடுப்பதையோ அல்லது புகைப்படம் எடுப்பதையோ தவிர்க்கவும்.
அதிகாரிகளின் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்றவும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் வலைசில் ஏற்பட்ட இந்த சீரற்ற நிலமைகள் காரணமாக இந்த பதற்றமான சூழல் சனிக்கிழமை பிற்பகல் வரை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கீஸ்டோன் செய்திச்சேவையின் அறிவிப்பின் படி இதுவரை 230 பேர் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை மதியம்முதல் கிராமத்தினூடான வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாயம் காரணமாக வீதி மற்றும் புகையிரத பாதை இரண்டும் வெள்ளிக்கிழமை பிற்பகல்முதல் மூடப்பட்டுள்ளன.
இன்று சனிக்கிழமையும் ரயில்கள் ஓடவில்லை எனவும் சில சாலை மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுவிட்சர்லாந்தின் பிற பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. கிராவுண்டனில் ஏற்பட்ட புயலுக்குப் பிறகு நான்கு பேர் கானாமால் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.