ஜெனீவா விமான நிலையத்தில் ஒரே நாளில் 80,000 பயணிகள்; பயணிகள் போக்குவரத்தில் குழப்பம்
சுவிட்சர்லாந்தில் உள்ள Geneva Airport-இல் ஒரே நாளில் சுமார் 80,000 பயணிகள் குவிந்ததால், கடந்த சனிக்கிழமை பெரும் குழப்பம் ஏற்பட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் முடிவடைந்து பலர் வீடு திரும்பியதுடன், வார இறுதி பயணிகளின் எண்ணிக்கையும் இணைந்ததால் விமான நிலையம் எதிர்பாராத அளவில் பரபரப்பாக காணப்பட்டது.
பயணிகள் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததன் காரணமாக, விமான நிலையத்தில் பயணிகளின் சாமான்களை எடுத்துச் செல்லும் தானியங்கி அமைப்பு பழுதடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பயணிகளின் உடைமைகள் விமான நிலையத்தின் பல பகுதிகளில் குவிந்து கிடந்ததால், பயணிகள் மத்தியில் குழப்பமும் அவதியும் அதிகரித்தது.
அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் மூலம் நிலைமை ஞாயிற்றுக்கிழமைக்குள் பெருமளவில் சீரடைந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அன்றைய தினமும் பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமாகவே இருந்ததாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜெனீவா விமான நிலைய வரலாற்றில் இதற்கு முன்னர் 2020ஆம் ஆண்டில் ஒரே நாளில் சுமார் 77,400 பயணிகள் பயன்படுத்தியதே அதிகபட்சமாக பதிவாகியிருந்தது. அந்த சாதனையை முறியடிக்கும் வகையில், சனிக்கிழமை 80,000 பயணிகள் ஒரே நாளில் விமான நிலையத்தை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது.
சுவிட்சர்லாந்து முழுவதும் குளிர்கால விடுமுறை காலங்களில் விமான நிலையங்களில் அதிக நெரிசல் ஏற்படுவது வழக்கமானதாக இருந்தாலும், இம்முறை ஏற்பட்ட பயணிகள் குவிப்பு ஜெனீவா விமான நிலையத்தின் செயல்பாடுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. பயணிகள் எதிர்கால பயணங்களில் கூடுதல் நேரத்தை ஒதுக்கி, விமான நிலைய அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
©WRS