மொபைல் கவனச்சிதறல் காரணமாக நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு – சுவிஸ் உச்சநீதிமன்றம் தண்டனை உறுதி
2021 அக்டோபரில் A1 அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த பேரழிவு விபத்தில், ஒரு லாரி ஓட்டுநர் மீது விதிக்கப்பட்ட தண்டனையை சுவிட்சர்லாந்தின் உச்சநீதிமன்றம் (TF) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விபத்து பிரான்சின் எல்லையில் அமைந்துள்ள Estavayer-le-Lac (FR) மற்றும் சுவிட்சர்லாந்தின் வெளட் கன்டோனிலுள்ள Yverdon-les-Bains (VD) இடையே உள்ள Bruyères சுரங்கப்பாதையில் நடைபெற்றது. அக்டோபர் காலை, தனது மொபைல் தொலைபேசியில் கவனம் செலுத்தியிருந்த லாரி ஓட்டுநர், எந்திரக் கோளாறு காரணமாக வலது வழித்தடத்தில் நின்றிருந்த காரை கவனிக்காமல் மோதினார். எச்சரிக்கை விளக்குகள் எரிந்து கொண்டிருந்தபோதிலும், மோதல் தவிர்க்கப்படவில்லை.

இந்த விபத்தில் மூவர் உயிரிழந்தும், ஒருவருக்கு கடுமையான காயங்களும் ஏற்பட்டன. (ப்ரைபோர்க்) Fribourg மாநில நீதிமன்றம் அந்த ஓட்டுநருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை (நிபந்தனை இன்றி) மற்றும் 300 ஃப்ராங்க் அபராதம் விதித்தது. மேலும், அலட்சியக் கொலை (Omicidio colposo) மற்றும் கடுமையான உடல் காயப்படுத்தல் குற்றச்சாட்டுகளுடன், முன்னர் இரண்டு முறை சுவிஸ் போக்குவரத்து சட்டங்களை மீறியதற்கும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.
தண்டனையை ரத்து செய்து, நிபந்தனைச் சிறை வழங்குமாறு குற்றவாளி மேல்முறையீடு செய்தார். ஆனால், லௌசான் நீதிமன்றம் அதை நிராகரித்தது. உச்சநீதிமன்றம், குற்றவாளி தன் செயலின் தீவிரத்தைக் குறித்து எந்தப் பொறுப்புணர்வும் காட்டவில்லை என்றும், மீண்டும் இதே தவறை செய்யும் அபாயம் அதிகம் என்றும் தீர்ப்பளித்தது.