அமெரிக்க சுங்க வரிகளால் பாதிப்பு: சுவிட்சர்லாந்தில் 25,000 பசுக்கள் ஆபத்தில்
சுவிட்சர்லாந்தில் சுமார் 25,000 பால் பசுக்கள் விரைவில் கொல்லப்படக்கூடும் என்ற எச்சரிக்கை எழுந்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள உயர்ந்த சுங்க வரிகள் காரணமாக சீஸ் ஏற்றுமதி கடுமையாகக் குறைந்து, இதனால் உற்பத்தி செய்யப்பட்ட பாலில் சுமார் 5 சதவீதம் அதிகப்படியான கையிருப்பு உருவாகியுள்ளது என சுவிஸ் பால் தொழில் சங்கம் (IP) தெரிவித்துள்ளது.
சமீபத்திய காலநிலைக் சூழ்நிலைகள் பால் உற்பத்தியை வழக்கத்தை விட அதிகரித்துள்ளதால், சந்தை விலைகள் வீழ்ச்சி அடையாமல் தடுக்கும் வகையில் பசுக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியது அவசியம் என அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தற்போது சுவிட்சர்லாந்தில் சுமார் ஐந்து இலட்சம் பால் பசுக்கள் உள்ளன; வருடந்தோறும் சராசரியாக 85,000 பசுக்கள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன.

பால் விநியோகம் அதிகரித்து, தேவை குறைந்ததால் விலைகள் குறைவது தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது. இதனால், பால் விலை நிலைத்திருக்க, பசுக்களின் எண்ணிக்கையை சுருக்க வேண்டுமென சங்கம் வலியுறுத்துகிறது.
கடந்த சில ஆண்டுகளில், விவசாயிகள் ஒரு லிட்டர் பாலை விற்று சுமார் 70 சதவீதம் வருமானம் பெற்றனர். ஆனால் இவ்வாண்டு சிலர் அதைவிட 30 சதவீதம் குறைவாக விற்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். ஏற்கனவே சில விவசாயிகள் தங்கள் கால்நடைகளைச் சுருக்கி, ஆரோக்கியமான பசுக்களை கூட இறைச்சி சந்தைக்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலை விவசாயிகளின் வருமானத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், சுவிஸ் பால் தொழில் சங்கம் அவசர நிதியொன்றை பயன்படுத்தி அடுத்த ஒன்பது மாதங்களுக்கு ஏற்றுமதிகளை ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக 11 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது நேரடியாக செயலாக்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டாலும், மறைமுகமாக பால் உற்பத்தியாளர்களுக்கும் ஆதரவாக இருக்கும். குறிப்பாக, கிரீம் மற்றும் வெண்ணெய் போன்ற பால் பொருட்களை சர்வதேச சந்தையில் போட்டியிடக்கூடிய விலையில் விற்க உதவும் வகையில் இந்த நிதி பயன்படுத்தப்படும் என சங்கம் விளக்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பால் தொழில் நாடு முழுவதும் முக்கியமான பங்கை வகிக்கிறது. ஆனால் சர்வதேச வர்த்தக கொள்கைகள், குறிப்பாக அமெரிக்காவின் கடுமையான சுங்க வரிகள், சுவிஸ் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு பெரிய சவாலை ஏற்படுத்தி வருகின்றன.
© KeystoneSDA