சென்ட்கேலன் ரயில் நிலையத்தில் 17 வயது இளைஞர் வெட்டிக்கொலை
செயிண்ட் காலென் ஹீர்ப்ருக் (Heerbrugg) ரயில் நிலையத்தில், 17 வயதான ஒரு இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலை 3.45 மணியளவில், ஒரு தனிநபர் செய்த காவல் நிலைய அழைப்பின் பேரில், ரத்தக்கறைகளுடன் கிடந்த இளைஞனை போலீசார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவும், அவசரப் பேரிடர் சேவையும், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.
17 வயதான அல்ஜீரிய இளைஞர், அல்ட்ஸ்டெட்டனில் உள்ள தற்காலிக இருப்பிடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது உடலில் கடுமையான வெட்டுக் காயங்கள் இருந்ததால், இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளர்கள் யார் என்பதும், அவர்கள் எங்கே சென்றனர் என்பதும் தற்போது தெரியவில்லை.

சம்பவ இடத்தில், செயிண்ட் காலென் மாநில காவல்துறை, நீதிமன்ற மருத்துவம், தீயணைப்பு துறைகள் மற்றும் SBB ரயில்வே பணியாளர்கள் விரைந்து சென்று, தடயங்கள் சேகரித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க நாடுமுழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
சம்பவம் நடந்த ரயில் நிலைய பகுதி மிகுந்த பாதுகாப்புடன் முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரயில் பயணங்களோ, பொதுமக்கள் போக்குவரத்தோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
@Kapo SG